மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது குறித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த பௌத்த விகாரையை எதிர்வரும் 29 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ள நிலையிலேயே மேற்படி கடிதம் இன்று (திங்கட்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“1991ஆம் ஆண்டு திருக்கேதீஸ்வரம் பகுதியை இராணுவம் அபகரித்த போது தமது வழிபாட்டுக்கு என அமைக்கப்பட்டது தான் இந்த பௌத்த விகாரை.
2009ஆம் ஆண்டிற்கு பின்னர் இராணுவம் அங்கிருந்து பிரதான படை முகாமை அகற்றிய போதும் இந்த பௌத்த விகாரையையும், பௌத்த மதகுருவையும் பாதுகாப்பதற்கு சிறிய இராணுவ முகாம் அமைத்து பாதுகாத்து வருகிறது.
வரலாற்றுப் புகழ் மிக்க திருக்கேதீஸ்வரம் சூழலில் இச் செயற்பாடு ஏற்புடையதா? 18.01.2012இல் பௌத்த மத அலுவல்கள் திணைக்களம் இந்த விகாரையின் பதிவை இரத்து செய்ததுடன் கட்டுமானப்பணிகளையும் நிறுத்தியது.
ஆனால் உங்கள் நல்லாட்சியில் தான் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இது சட்ட விரோத சனநாயக மீறல் அல்லவா? இதுவா நல்லாட்சி?
தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களில் கலாசார மாற்றத்தை ஏற்படுத்தி போலியான புனைவு பெயர்களின் மூலம் பௌத்த மயமாக்கல் வேலைத்திட்டத்தை முன்னகர்த்துகிறீர்களா?
சட்ட விரோதமாக தனியாருக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்ட சட்ட விரோதமான விகாரை திறப்பதற்கு தமிழ் மக்களின் வாக்குக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாகிய நீங்கள் உங்களை தெரிவு செய்த மக்களின் விருப்புக்கு மாறாக நீங்கள் விழாவிற்கு வருவது தார்மீக அடிப்படையில் நியாயம் தானா?
எமது நியாய பூர்வமான வேண்டுகையை புறக்கணித்து குறித்த திறப்பு விழா நடைபெற்றால் ஜனநாயக ரீதியில் கறுப்பு கொடியேந்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்பதையும் தங்களிற்கு வினயமாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.