மத்திய வங்கியின் ஆளுநர் வடபகுதிக்கு விஜயம்!

மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இன்று (வெள்ளிக்கிழமை) வட.பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இரண்டு நாட்களுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஆளுநர், வடக்கு மக்களின் கடன்பளு பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில் மாவட்ட செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர்கள், கமநல – கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேற்படி கலந்துரையாடல் நாளை கிளிநொச்சியிலும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வடக்கில் நுண்-நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்களைப் பெற்றுக் கொண்ட வாடிக்கையாளர்கள், அவற்றைத் திருப்பி செலுத்த முடியாமல் அவதியுறும் போக்கு நீடிப்பதால் மேற்படி கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts