மத்திய அரசு போடும் முட்டுக்கட்டைகளை கூட்டுறவு மூலம் இணைந்து உடைப்போம்! -முதலமைச்சர்

vicky0vickneswaranமத்திய அரசு எமது செயற்பாடுகளை முடக்குவதற்கு பலவித நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதால் கூட்டுறவே அத்தடைகளை உடைத்தெறிந்து முன்னேற வழிவகுக்கும் என்று தெரிவித்திருக்கின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

வடக்கு மாகாண சபையின் கீழான கூட்டுறவு சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம் நேற்று காலை முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அங்கு உரையாற்றும்போது முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:-

மத்திய அரசாங்கத்திற்கும் எமக்கும் சில விடயங்களில் ஒருங்கிணைந்த அதிகாரங்கள் இருப்பினும் உள்ளூராட்சி, கூட்டுறவு பற்றிய விடயங்களில் எமக்குப் போதிய அளவு அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றன என்பதை நாம் மறத்தலாகாது.

போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் எம்மக்களுக்கு பல வித சேவைகளை கூட்டுறவு மூலம் நாங்கள் வழங்க முடியும் என்பதையும் நாம் உணர்ந்திருக்க வேண்டும். உண்மையில் மத்திய அரசாங்கம் எமது செயற்பாடுகளை முடக்குவதற்குப் பலவித நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதால் கூட்டுறவே எமக்கு அத்தடைகளை உடைத்தெறிந்து முன்னேற வழிவகுக்கும் தன்மை வாய்ந்தது என்பது எனது கருத்தாகும்.

உலக மகா யுத்தங்களால் பாதிக்கப்பட்ட பல நாடுகளில் மக்கள் வாழ்க்கையின் சீரமைப்புக்கு வழிவகுத்தது கூட்டுறவே. ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இதற்கு உதாரணம்.

ஆபிரிக்காவிலும் அண்மையில் சமாதானம் ஏற்பட்ட உடன் மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளைப் பெற்றுக் கொடுக்க அவர்கள் சுவீகரித்தது கூட்டுறவு முறையையே. தென்னாபிரிக்கா, எரித்திரியா, ஸாம்பியா, மலாவி, தன்சானியா போன்ற ஆபிரிக்க நாடுகள் இதற்கு உதாரணம்.

எம்மைப் பொறுத்த வரையில் போருக்கு முன்னர் வடமாகாணப் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கிய ஊன்றுகோலாக மிளிர்ந்தது கூட்டுறவே என்று கூறலாம்.

உற்பத்தியாளர்களிடம் இருந்து வேளாண்மைப் பொருட்களையும் வேறு பொருட்களையும் வாங்கி நியாயமான விலையில் அவற்றை சந்தைப்படுத்த அவர்கள் உதவிபுரிந்து வந்தார்கள்.

போர் அவற்றை எல்லாம் சின்னாபின்னப்படுத்திவிட்டது. இப்பொழுது மீண்டும் கூட்டுறவுத் துறை மீளெழுந்து பணிபுரிய நாங்கள் யாவரும் ஒத்துழைக்க வேண்டும். எம் மத்தியில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள், மீனவர் கூட்டுறவுச் சங்கங்கள், சிக்கனக் கடனுதவிக் கூட்டுறவுச் சங்கங்கள், பனை, தென்னை சம்பந்தமான கூட்டுறவுச் சங்கங்கள் என்று பலவித கூட்டுறவுச் சங்கங்கள் தற்பொழுதும் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்பொழுது அவை சிறிது சிறிதாகத் தமது பணிகளை ஆற்ற முன்வந்துள்ளன. சிற்சில கூட்டுறவுச் சங்கங்களில் காணப்படும் குறைபாடுகள் பல எமக்கு உணர்த்தப்பட்டுள்ளன. அவற்றுள் பல சங்கங்கள் அரசியல் ரீதியாகச் செயற்பட வேண்டியிருப்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor