மத்திய அரசுக்குரிய சரத்துக்களை நீக்குமாறு வட மாகாணசபைக்கு ஜீ.ஏ.சந்திரசிறி பரிந்துரை

GA Chandrasiriவட மாகாண சபையினால் உருவாக்கப்பட்ட 3 நியதிச் சட்டங்களில், மத்திய அரசுக்குரிய சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அவற்றை நீக்குமாறு, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி பரிந்துரை செய்துள்ளார்.

இந்த பரிந்துரை அடங்கிய கடிதத்துடன், மேற்படி நியதிச் சட்டங்களும் நேற்று செவ்வாய்க்கிழமை (22) மாலை வடமாகாணச் செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று ஆளுநர் அலுவலகம் தெரிவித்தது.

வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட நிதி நியதிச் சட்டம், முதலமைச்சர் நியதிச்சட்டம், மற்றும் முத்திரை வரி கைமாற்றல் நியதிச்சட்டம் ஆகியனவே செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட மேற்படி 3 நியதிச் சட்டங்களும், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் பரிசீலனைக்காக கடந்த ஜுன் மாதம் 6ஆம் திகதி வடமாகாண சபையினால் அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, இந்நியதிச் சட்டங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நிதி ஆலோசனைக்குழு என்பவற்றின் ஆலோசனைகளை வடமாகாண ஆளுநர் கோரியிருந்தார்.

இதன்போது, மத்திய அரசிற்குரிய சில சரத்துக்கள் நிதி நியதிச்சட்டத்தில் இருப்பதாகவும் அதனை நீக்கும்படி சட்டமா அதிபர் திணைக்களம் ஆளுநருக்கு கூறியிருந்தது.

அதனைத் தொடர்ந்து, நீக்கப்பட வேண்டிய சரத்துத் தொடர்பிலான பரிந்துரையுடன் கூடிய கடிதத்துடன் நியதிச் சட்டங்கள் வடமாகாணச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அவை இன்று புதன்கிழமை (23) மாலைக்குள் தமக்குக் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தினர் தெரிவித்தனர்.