மடு – தலைமன்னாருக்கான புகையிரத சேவை டிசம்பரில் ஆரம்பம்

மடுவுக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரத சேவை, எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்ப்பதாக யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார்.

india-1

இந்தியாவின் 68ஆவது சுதந்திரதினம் மருதடி வீதியில் அமைந்துள்ள யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மூர்த்தி இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்திய துணைத்தூதரகம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட்ட 4 வருடங்களில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பலருக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரக்கூடிய அச்சுவேலி கைத்தொழில் பேட்டை நிர்மாணிக்கப்பட்டு வருதல், வவுனியா வைத்தியசாலைக்கான கட்டிடத்தொகுதி, யாழ் பல்கலைக் கழகத்தின் விவசாய மற்றும் பொறியியற் பீடங்கள் கிளிநொச்சியில் நிறுவுவதற்கான உதவித்திட்டம், துரையப்பா விளையாட்டரங்கினை புனரமைத்தல், யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையமொன்றை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் 2012ஆம் ஆண்டு முதல் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டமானது பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. இதுவரை 14,514 வீடுகள் நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், 19,703 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

நுண்கலைகளை வளர்க்கவும், கலாசார உறவுகளை பலப்படுத்தவும், இளம் கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.

அந்தவகையில், நல்லூர் திருவிழாக் காலத்தில் இம்மாதம் 24, 25 ஆகிய திகதிகளில் நடன, இசைக் கச்சேரிகளை சங்கிலியன் தோப்பில் நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor