மக்கள் வங்கியில் களவாடிய நபர் நகைகளுடன் சரணடைவு – மக்கள் நகைகளை இழந்ததால் தற்கொலைக்கு முயற்சி

யாழ் பல்கலைக்கழக மக்கள் வங்கிக் கிளையின் திருநெல்வேலி விரிவாக்கல் கிளையில் பணியாற்றிய ஊழியர் ஒருவரின்மோசடி காரணமாக தமதுநகைகளின் இருப்புக் குறித்து அறிவதற்கு அவசரமாகச் சென்ற மக்கள் மீது மக்கள் வங்கி அதிகாரிகள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் இன்று காலை முதல் திருநெல்வேலிச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள மேற்படி கிளைக்கு அதிகாலை முதல் பெருமளவான வாடிக்கையாளர்கள் திரண்டிருந்தனர்.

வங்கி திறக்கப்பட்டதும் உள்ளே சென்று தமது நகைகள் குறித்து வினவிய போது அங்கிருந்த பெண் அதிகாரி ஒருவர் மக்கள் மீது சீறிப் பாய்ந்ததோடு, இப்பொழுது பார்க்க முடியாது சில காலம் கழித்து வாருங்கள், பணத்தைச் செலுத்தி நகையை மீட்பதாக இருந்தால் நில்லுங்கள். கணனிகள் இயங்கத் தொடங்கியதும் பார்க்கலாம் என்று பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்துள்ளார்.

தமது நகைகள் இருக்கின்றனவா இல்லையா என்பதை அறிய முடியாமல் தவித்த மக்களுக்கு அவர்களது உணர்வுகளை மதிக்காமல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் பெரும் அதிருப்தியை அளித்துள்ளது.

இதே வேளை – நகைகளை மீட்பதற்குத் தயாராக வந்த பலரது நகைகள் காணாமல் போயிருந்தமை அறியப்பட்டுள்ளது. தனது மனைவியின் தாலி உட்பட பல நகைகளை நம்பி அடகுவைத்த பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு அவரது நகைகள் இல்லை என்று அதிகாரிகள் கைவிரித்த விரக்தியினால், தற்கொலைக்கு முயன்று அலுவலக நண்பர்களால் காப்பாற்றப்பட்டதாக அறிய வருகின்றது.

தான் பாதுகாப்புக்காகவே நகைகளை அடகுவைக்க நேரிட்டதாகவும், இனி என்ன முகத்துடன் வீடு செல்ல முடியும் என்றும் விரக்தியுடன் அந்த ஊழியர் தெரிவித்திருக்கிறார். இதேபோலவே பல குடும்பஸ்தர்களும், பெண்களும் செய்வதறியாது குடும்பத்துடன் தற்கொலை செய்யும் நிலை தோன்றியிருக்கின்றது.

இந்த மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபரான பி.கஜனாத் என்பவர் நேற்று மாலை கோப்பாய் பொலீஸ் நிலையத்தில் சரணடைந்திருப்பதாகவும், கையாடிய நகைகளில் ஒரு பகுதியை பொலீஸாரிடம் கையளித்திருப்பதாகவும் தெரியவருகிறது. அத்துடன் கஜனாத்தின் சகாக்கள் சிலரும், வங்கியின் உயரதிகாரி ஒருவரும் தொடர்புபட்டிருப்பதாக பொலீஸ் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.