மக்கள் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்பால் காணி சுவிகரிப்பு முயற்சி மாதகலில் கைவிடப்பட்டது

மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கும் நோக்கில் தனியார் காணியை பொலிஸாரின் உதவியுடன் அளவிட வந்த நில அளவை திணைக்கள அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்பால் அந்தப் பணிகளை கைவிட்டுத் திரும்பிச் சென்றனர்.

maatakal

இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது.

மாதகல் பகுதியில் தனியார் காணியில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் இயங்கி வந்தது. இந்த இடத்திலேயே 40 இற்கும் மேற்பட்ட மீன் பிடிப் படகுகள் நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த காணியை கடற்படையினருக்காக சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று அளவீட்டுப் பணிகளுக்காக அங்கு வந்திருந்தனர்.

இதை அறிந்து அங்கு சென்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.சிறிதரன், வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், உறுப்பினர்களான பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், க.சர்வேஸ்வரன் மற்றும் பிரதேச உறுப்பினர்கள் ஆகியோர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நில அளவைத் திணைக்கள அதிகாரிகளுக்குத் துணையாக பெருமளவான பொலிஸாரும் கடற்படையினரும் அங்கு பிரச்சன்னமாகியிருந்தனர். எனினும் மக்கள் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்பால் இன்று அளவீட்டுப் பணிகள் கைவிடப்பட்டன.