யாழ். குடாநாட்டில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி காலை, பிற்பகல், இரவில் பெய்யும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றது இதனால் காற்றும் பலமாக வீசக் கூடும் எனவே மக்கள் இழப்புக்களை தடுக்க உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி வி.பிரதீபன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தார்,
யாழ். குடாநாட்டில் தினமும் பிற்பகலிலும் இரவிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மி.மீ மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் மேற்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் பிற்பகல் காலை வேளைகளிலும் இடியுடன் கூடிய மழை ஏற்படலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் தறுவாயில் தற்காலிகமானக காற்றானது சீற்றம் கொண்டதாக காணப்படும். மக்கள் இழப்புக்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நேற்று காலை 8.30 மணியில் இருந்து இன்று காலை 8.30 மணி வரை யாழ்ப்பாணம் திருநெல்வேலிப்பகுதியில் மாத்திரம் 27.2 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் 89.7 மி.மீற்றராக பதிவாகியுள்ளது. ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து இன்று வரை 121.0 மி.மீ மழை வீழ்ச்சி மட்டுமே பதிவாகியுள்ளது.
எனினும் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் கிடைத்த 81.7 மி.மீ மழை வீழ்ச்சியை விட இம்முறை அதிகமாக உள்ளது.
இருப்பினும் இந்த ஆண்டு ஜனவரி முதல் இன்று வரை 479.5 மி.மீ மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளது. ஆனால் கடந்த வருடம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து ஒக்ரோபர் முதலாம் திகதி வரை 702.3 மி.மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
எனவே இம்முறை ஆண்டு மழை வீழ்ச்சி குறைவாகவே காணப்பட்டாலும் ஒக்ரோபர் மாதத்திற்கு உரிய மழை வீழ்ச்சி அதிகமாகவே காணப்படுகின்றது. எனினும் மழை வீழ்ச்சியானது இனிவரும் நாட்களில் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.