மக்கள் ஆணையைத் துஷ்பிரயோகம் செய்தால், மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் – கமலேந்திரன்

kamal_epdpமக்கள் ஆணையைத் துஷ்பிரயோகம் செய்தால், மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என யாழ்.மாவட்ட ஈ.பி.டி.பி. அமைப்பாளரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்தள்ளார் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி கண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பல்வேறு வாக்குறுதிகளை வழமைபோல் வழங்கியிருந்தமை எமது மக்கள் அறிந்த விடயமாகும்.

இவ்வாறு வாக்குறுதிகளை வழங்கியவர்கள் இன்று வெளிநாட்டுப் பயணங்களுக்கும், சந்திப்புக்களுக்கும், ஏன் போனஸ் ஆசனங்களுக்குமாக அடித்துக் கொண்டு இருக்கிறார்களேயன்றி, எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் வாய்திறவா நிலையிலேயே இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தங்களது தனிப்பட்ட விருப்பங்களின்றி, தமிழ் மக்களின் விருப்பங்களே தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடங்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெளிவாகவே சுட்டிக்காட்டி இருக்கும் நிலையில், வடக்குக் கிழக்கில் காணிகள் மீதான கட்டுப்பாட்டை மாகாண நிர்வாகம் தக்க வைத்துக் கொள்வதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றுறுதி கொண்டுள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறிப்பிடுகின்ற நிலையில், காணிகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்குக் கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சரான, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு.வீ.சி.விக்னேஸ்வரன் அவர்கள், காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு பெற்றுத் தருவது தமது முக்கிய குறிக்கோள்களில் முதன்மையானவை என்று தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இராணுவ நோக்கத்திற்காக தமிழ் மக்களின் பெருமளவு காணிகளை அரசு கையகப்படுத்தி இருப்பதாகச் சுட்டிக்காட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், 500,000ற்கும் மேற்பட்ட தமிழர்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் என்றும் வாக்குறுதி வழங்கியிருந்தது.

இழந்த நிலத்தை மீட்டு, மீள்குடியேறும் எண்ணமே தமிழர்களிடம் ஓங்கியிருப்பதாக தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை வந்திருந்த இந்தியாவின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் திரு. கோபாலசாமி தமிழகப் பத்திரிகையான தினமலருக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்களது காணி விவகாரம் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்களென எமது மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறெல்லாம் வாக்குறுதிகளை வழங்கி எமது மக்களது ஆணையைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம் என வழமை போல் வெறும் பத்திரிகை அறிக்கைகளை விடுத்துக் கொண்டே மாகாண சபையின் ஆட்சிக் காலத்தை ஓட்டிவிட முனைவார்களா? அல்லது அவர்கள் அடிக்கடி கூறுவது போல், சிங்கள அரசு எமக்கு எதுவுமே தராது, எனவே, சர்வதேசம் பார்த்துக் கொள்ளும் என்ற தமது பழைய பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கப் போகிறார்களா? இதுவரையும் எந்த உதவியும் செய்திராத சர்வதேசத்தை முன்வைத்து சர்வதேசமே துணை என்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எமது மக்கள் வழங்கியுள்ள ஆணையானது அவர்களது சுயதேவைகளுக்குள் மறைந்துவிடக் கூடாது என்பதை எமது மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு தொடர்ந்து செயற்பட்டு வரும் நாம் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.

எனவே, பெற்றுக் கொண்ட எமது மக்களின் ஆணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் துஷ்பிரயோகம் செய்ய முனைந்தால், அதற்கு எதிராக, நீதியான மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்படும். இதற்கு எமது மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது