மக்களின் காணிகளை வழங்குவதா, இல்லையா, என்பதை இராணுவம் தீர்மானிக்க முடியாது!

a-h-m-fowzieவடபகுதியில் இராணுவத்தினர் பொது மக்களின் பாதுகாப்பு நலன்களில் அக்கறை கொள்ளலாம், காணிகளைப் பகிர்வது அதனை வழங்குவதா, இல்லையா, என்பதைத் தீர்மானிக்க முடியாது. இவ்வாறு சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பௌசி தெரிவித்தார்.

வடக்கில் பொது மக்களது காணிகளை இராணுவம் வைத்திருக்குமெனில் அவற்றை உரியவர்களிடம் கையளிப்பதற்குத் தேவையான அழுத்தத்தை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கொடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் பௌசி தெரிவித்தார்.

மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு விஜயம் செய்த அமைச்சர் பௌசி தலைமையிலான உயர்மட்ட அரசியல் பிரமுகர்களைக் கொண்ட குழுவினர் வவுனியா புளியங்குளம் கிராமத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அமைச்சர் பௌசி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் பௌசி மேலும் கூறியதாவது,

தற்போது நாட்டில் சமாதான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமது கிராமங்களுக்கு வருகின்றனர்.

இங்கு வந்து பார்த்தால் அது காடுகளாகி இருக்கின்றன. அதனை துப்புரவு செய்ய பல்வேறு இடையூறுகள் காணப்படுகின்றன.

குறிப்பாக பொதுமக்களது காணிகளை, வீடுகள் இருந்த இடங்களை மற்றும் விவசாயம் செய்தவைகளை மக்கள் மீளப் பெறமுடியாதுள்ளது.

அதனை இராணுவத்தினர் பராமரிக்கின்றனர். அதற்குள் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.

இராணுவத்தினர் மக்களின் பாதுகாப்பு நலன்களில் அக்கறைகொள்ளலாம், காணிகளைப் பகிர்வது அதனை வழங்குவதா, இல்லையா, என்பதைத் தீர்மானிக்க முடியாது.

அன்று புலிகள் இறுதி பகுதியினை தமது பிரதேசமாக வைத்திருந்தனர். இன்று அந்த நிலை மாறியுள்ளது.

எனவே, காணிகள் அம்மக்களின் மேம்பாடுகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

காணி அதிகாரங்கள் உரிய அமைச்சுகளின் கீழ் உள்ள விடயங்கள், அவற்றை அந்த அமைச்சுடன் பேசித் தீர்த்துக் கொள்ளமுடியும். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள் என்றார் அமைச்சர் பௌசி.