மக்களின் உரிமை பிரச்சினைக்கே முன்னுரிமை – ஆயர் இராயப்பு ஜோசப்

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மக்களின் உரிமைகளை விட வேறு பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் கேட்டுக்கொண்டுள்ளார்.

mannar-bishop

கடந்த வெள்ளியன்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னால் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளாத உறுப்பினர்கள் 9 பேரும், தனியாக முல்லைத்தீவில் பதவிப் பிரமாணம் செய்துகொள்வதற்கு எடுத்துள்ள முடிவை மாற்றிக்கொள்ளுமாறும் மன்னார் ஆயர் கட்சித் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 25-ம் திகதி கூடவுள்ள வடக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வின்போது, முதலமைச்சர் முன்பாகவே அவர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் ஆயர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என்றும் சுட்டிக்காட்டிய இராயப்பு ஜோசப், மக்களின் உரிமைகளை விட தமிழ்க் கட்சிகளுக்கு வேறு முன்னுரிமையான பிரச்சினைகள் இருக்க முடியாது என்றும் கூறினார்.

ஏற்கனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனிக்கட்சியாக பதிவு செய்வதற்கு சிவில் அமைப்புகளின் சார்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் கடந்த காலங்களில் வெற்றியளிக்கவில்லை.

தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியாக ஒரே கொள்கைத் திரட்டின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக பதிவு செய்யப்படுவதற்கு காலம் கனிந்துவிட்டதாகக் கூறிய மன்னார் ஆயர், அடுத்த கட்டமாக அதற்கான பேச்சுவார்த்தைகள் மீண்டும் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தை வென்றெடுப்பதற்கு கூட்டணிக் கட்சிகளுக்குள் நிலவும் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் வேண்டுகோளை ஏற்று முல்லைத்தீவில் நடைபெறவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்பது உறுப்பினர்களதும் பதவியேற்பு வைபவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனை சபையின் ஆரம்ப நிகழ்வின்போதோ அல்லது அதற்கு முன்னதாக இன்னொரு திகதியிலோ எண்ணியுள்ளோம் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

எனினும் இன்றை தினம் சிவாஜிலிங்கம் அவர்கள் முல்லைத்தீவில் வைத்து பதவிப்பிரமாணம் செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

முள்ளிவாய்க்காலில் சிவாஜிலிங்கம் சத்தியப்பிரமாணம்!

முள்ளிவாய்க்கால் சத்தியப்பிரமாண நிகழ்வு இடைநிறுத்தம்

விடுதலைப் போரட்டத்தைக் கேவலப்படுத்தவா முள்ளிவாய்க்கால் பதவிப்பிரமாணம்? – முல்லை மக்கள் கேள்வி