Ad Widget

மகேஸ்வரி நிதிய விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை!

யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்கத்துக்கு மகேஸ்வரி நிதியத்தால் வழங்கப்பட வேண்டிய சுமார் ஒரு கோடி ரூபா பணம் சம்பந்தமான விசாரணைகள் மீண்டும் கோப்பாய் பொலிஸாரினாலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய புலனாய்வுத்துறையினராலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என சங்கத்தின் பணிப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மகேஸ்வரி நிதியம் தமக்கு தரவேண்டிய பணத்தை தரமறுப்பதாகத் தெரிவித்து லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததுடன் அதனை வழங்கக் கோரி பல ஆர்பாட்டங்களையும் பேரணிகளையும் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது மணல் வியாபாரத்தில் இருந்து மகேஸ்வரி நிதியம் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் வட மாகாண சபையின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை இடம்பெறுகின்றது.

கடந்த வரவு – செலவு விவாதத்தின்போது நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இது குறித்து உரையாற்றிய நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts