மகளை கண்டுபிடித்து தருமாறு நாமலிடம் கண்ணீர் விட்ட தாய்

namal-jaffnaகாணாமல் போன தனது மகளை தேடித் தாருங்கள் என்று காணாமல் போன யுவதியொருவரின் தாய், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் காலில் விழுந்து கண்ணீருடன் உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றது.

நேற்று ஞாயிற்றிக்கிமை வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற பட்டதாரிகள் மாநாட்டை நிறைவு செய்துவிட்டு வருகை தந்த நாமல் எம்.பி.யிடம் இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

தனது மகள் கிளிநொச்சியில் உள்ள சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தில் கடமையாற்றி வந்ததாகவும் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இவர் காணாமல் போயுள்ளதாகவும் இது குறித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை என்று அந்த தாயார் நாமலிடம் தெரிவித்தார்.

இந்த தாயாரின் கோரிக்கையை கவனத்திற்கொண்ட நாமல் எம்.பி, உடனடியாக யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரை அழைத்து இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார்.