போலி வலம்புரிச் சங்கு விற்றவருக்கு விளக்கமறியல்

jail-arrest-crimeவலம்புரிச் சங்கு எனக் கூறி போலியான சங்கொன்றை ஏமாற்றி 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த ஒருவரை பொலிஸார் கைதுசெய்து யாழ். நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர் என யாழ். பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்பு அதிகாரி விக்கிரம ஆராய்ச்சி தெரிவித்தார்.

கோண்டாவிலைச் சேர்ந்த வங்கியொன்றில் சிற்றூழியராகப் பணிபுரியும் நபரொருவரே இவ்வாறு சங்கை விற்பனை செய்துள்ளார். இச் சங்கினை வலம்புரிச் சங்குஎன எண்ணி 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தைக் கொடுத்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் வாங்கியுள்ளார்.

பின்னர் இச்சங்கு வலம்புரிச் சங்கு அல்ல என்ற விடயம் தெரிய வந்தபோது சங்கினை வாங்கியவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.

பொலிஸார் குறித்த நபரைக் கைதுசெய்து யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளார். வழக்கை விசாரித்த நீதவான் குறித்த சந்தேகநபரை 11 நாட்கள் விளக்கமறியலில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.