போர் முடிவுக்கு பின்னர் யாழில் தற்கொலை வீதம் அதிகரிப்பு

வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டத்திலேயே தற்கொலை செய்து கொள்ளும் வீதம் அதிகரித்துள்ளது என யாழ்.பல்கலைக்கழக மனநல துறை பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் தயா சோமசுந்தரம் தான் சேகரித்துள்ள புள்ளிவிபரங்களுக்கு அமையவே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி போர் முடிவிற்கு முன்னர் அதாவது 2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சம் பேருக்கு 23 வீதமாக இருந்தது.

அதன்பின்னர் போர் ஆரம்பமாகி அது தீவிரமடைந்த போது 2007 ஆம் மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை 20 வீதமாக குறைந்தது.

போர் உச்சக்கட்டத்திலும் தமிழ் சமூகம் கடும் அச்சுறுத்தலான நிலைமையில் இருந்த 2009 ஆம் ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சம் பேருக்கு 15 வீதமாக குறைந்திருந்தது.

போர் முடிவடைந்து 2011 ஆம் ஆண்டு வரை 25 வீதமாக இந்த தற்கொலைகளின் எண்ணிக்கை உயர்ந்தது. 2012 ஆம் ஆண்டு மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் 24 வீதத்திலேயே இது காணப்பட்டது.

முன்னைய இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்ற காலத்துடன் ஒப்பிடும் போது, 2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையான சமாதான காலத்திலும் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.

பேரதிர்ச்சி, அழுத்தங்கள் பல்வேறு வகையான தாக்கங்கள் இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்துள்ளது. யுத்தத்தின் போது, ஒரு வலுவான சமூக ஆதரவுக் கட்டமைப்பு இருந்தது. எனினும் தற்போது இலங்கை இராணுவத்தின் முற்றுகையின் கீழ் மக்கள் தாக்கங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அதன்படி போருக்கு பின்னர், குடும்பங்கள் பிரிக்கப்பட்டமை போன்ற நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் மன தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன எனவும் தயா சோமசுந்தரம் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor