Ad Widget

போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்படவில்லை!! சிவமோகன்

புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டது எனக் கூறப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டில் எந்தவித உண்மையுமில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு வயிற்றுவலி வாந்திபேதிக்கு ஊசி ஏற்றியிருக்கலாம் எனவும் குதர்கமாகப் பேசியுள்ளார்.

sivamokan

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் குழுநிலைக் கூட்டம் கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்ற கட்டடத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் போராளிகள் மர்மமாக உயிரிழந்து வருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவமோகன் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டது எனக் கூறப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டில் எந்தவித உண்மையுமில்லை. மேலும் அவர்களுக்கு வயிற்றுவலி வாந்திபேதிக்கு ஊசி ஏற்றியிருக்கலாம்.

முன்னாள் போராளிகளின் உயிரிழப்புத் தொடர்பில் வீணான வதந்திகள் பரப்பப்படுகிறது. ஊடகங்களும் இந்த விடயத்தில் பொய்யுரைக்கின்றன.

முன்னாள் போராளிகள் மட்டுமா உயிரிழக்கிறார்கள். சாதாரண பொதுமக்களும்தானே உயிரிழக்கிறார்கள். புற்றுநோய் போன்ற கொடிய நோய் பாதிப்புக்கள் முன்னாள் போராளிகளுக்கு மட்டுமா ஏற்படுகிறது?, சாதாரண பொது மக்களும் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் தானே?

உயிரிழக்கின்ற அனைவருக்கும் விச­ ஊசி ஏற்றப்பட்டதா? எனவே இவ்வாறு ஊசி ஏற்றப்பட வாய்ப்பில்லை. விச ஊசிப் பிரச்சினையை யாரோ பின் நின்று பூதாகரமாக இயக்கி வருகின்றனர்.

சிறைச்சாலையில் முன்னாள் போராளிகள் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது அவர்களுக்கு பலநோய்த்தாக்கங்கள் ஏற்பட்டிருக்கலாம்.வாந்திபேதி, வயிற்றுக்குத்து போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்கவும் ஊசி மூலம் மருந்து ஏற்றப்படும் என தனது கருத்தை வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்தார்.

இதன்போது இக்கருத்தை இடை மறித்த இரா.சம்பந்தன், முன்னாள் போராளிகளின் உயிரிழப்பை சாதாரண விடயம் எனக்கருதி ஒதுக்கிவிட முடியாது.

முன்னாள் போராளிகளை நாம் மருத்துவ பரிசோதனை செய்தாக வேண்டும். அதில் குறைந்தது ஒருவருக்காவது விச­ ஊசி ஏற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் இலங்கை அரசாங்கத்தின் பயங்கரமான போர்க் குற்றம் வெளிக் கொணரப்படும்.

எனவே இவ்விடயத்தில் முன்னாள் போராளிகளின் விபரங்களை திரட்டி அவர்களை மருத்துவ பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Related Posts