போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதிரட்ட இலவச இசைக்கச்சேரிக்குத் தயார்

“இலங்கையில் இசைக் கல்லூரி ஒன்றை அமைத்து, இசையில் ஆர்வமுள்ளவர்களை அதில் பயிற்றுவித்து முன்னேற்றுவதற்கான வழிவகைகளைச் செய்வோம்” என்றும் “போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக இலவச இசை நிகழ்வு நடத்த தயாராக உள்ளோம்” என யாழ்ப்பாணம் வந்துள்ள தென்னிந்தியப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் தெரிவித்தனர்.

spb-kankai-amaran-2

ஜெட்வின் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பு போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

‘இது தொடர்பான அறிவிப்பை யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனல் ஆ.நடராஜன், இன்னும் ஒரிரு தினங்களில அறிவிப்பார். இது தொடர்பான மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளது’ என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

‘இலங்கை எவ்வளவு அழகான தீவு என்பதை வரும் போது பார்வையிட்டேன். இங்குள்ள ரசிகர்கள் வித்தியாசமானவர்கள். இந்தியாவில் நடிகரின் திரைப்படத்தில் பாட்டு பாடுங்கள் என்று கேட்பார்கள். ஆனால், இங்கு அந்தப் பாட்டை பாடுங்கள், அந்த வரியை பாடுங்கள் என்பார்கள். அந்தளவுக்கு பாட்டை ரசிக்கின்றனர்’ என எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதேவேளை, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக இலவசமாக இசைக்கச்சேரி ஒன்றை நடத்துவதற்கு தாயாராக இருப்பதாகவும், அதற்கு இங்குள்ள அனைவரும், ஒன்று சேர்ந்து அழைத்தால் இங்கு வந்து அதனைச் செய்து தருவதாக இருவரும் இதன்போது உறுதியளித்தனர்.

அவ்வாறு இசை நிகழ்ச்சியை நடத்தினால், சேகரிக்கப்படும் நிதி உரிய முறையில் சென்றடையும் வழிமுறையும் கூறப்பட்டால், எமது சொந்தச் செலவில் இங்கு வந்து அதனைச் செய்வோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Recommended For You

About the Author: Editor