Ad Widget

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு கரிசனை காட்டவில்லை – முதலமைச்சர் சி.வி.

vickneswaran-vicky-Cmஅரசாங்கம் பாரிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எடுக்கும் கரிசனையை, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாடத் தேவைகள் சம்பந்தமாக காட்டாதிருப்பது மனவருத்தம் தருகிறது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மஹிந்தோதயத் திட்டத்தின் கீழ், ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்திலும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையிலும் அமைக்கப்படவுள்ள தொழில்நுட்பப்பீடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா அப்பாடசாலைகளில் திங்கட்கிழமை (30) நடைபெற்றன.

இந்த நிலையில், வேம்படி பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

‘கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் தொழில்நுட்பம் ஒரு பாடமாக ஆக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதை கல்லூரிகளில் செவ்வனே பயிற்றுவிக்க ஏதுவாக தொழில்நுட்பப்பீடங்கள் நிறுவப்பட்டன.

தொழில்நுட்பப் பாடங்களை கற்பிக்கவும் அதற்கான மாணவ அறைக் கட்டடங்களையும் உரிய கருவிகளையும் வகுப்பறை அனுசரணைகளையும் வழங்குவதே இத்திட்டத்தின் குறிக்கோள்.

2013ஆம் ஆண்டு தொடக்கம் தேசிய மட்டத்தில் 250 பாடசாலைகளில் உயர்தர மட்ட தொழில்நுட்ப ஒழுங்குமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. தொழில்நுட்ப மாணவர்கள் வருங்காலத்தில் மிக முக்கிய பங்கை வகிக்கவுள்ளார்கள் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது.

தொழில்நுட்பக் கல்வியானது சகல தொழில்கள் பற்றி அல்லது குறிப்பிட்ட தொழில்கள் பற்றிய வழிமுறைகளை அவை சார்ந்த கல்வியை பெறுவதாகும்.

எமக்கு வெளியிலிருக்கும் இந்த உலகத்தை மாற்றி அமைக்கக் கிடைக்கும் பொருட்களை வைத்து, கருவிகளை வைத்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இவ்வாறான கல்வி எமக்கு உதவியளிக்கின்றது.

மேற்கத்தைய நாடுகள் இதுவரையில் இதையே செய்து வந்துள்ளன. பாரிய தெருக்கள், கட்டடங்கள், ரயில்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் என்று பலவாறாக தொழில்நுட்ப அதிசயங்களை கண்டுபிடித்து அவற்றைப் பயன்படுத்தியும் வந்துள்ளார்கள்.

அவர்களின் வாழ்க்கையின் குறிக்கோள்கள் கூட பொருளாதார விருத்தியிலும் தொழில்நுட்ப விருத்தியிலுமே அடக்கம் பெற்றன. அறநெறிகள், சமய நோக்குகள், ஆத்மிக மேம்பாடு போன்றவை அவர்கள் உலகாயத வாழ்க்கைக்கு அப்பாற்பட்டவை, அவசியமில்லை என்று நினைத்து இயல்பியல் உலகையே கதி என்று வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், வெகு விரைவில் பொருளாதார ரீதியாகப் பல பின்னடைவுகளை உலகத்தின் உயர்நிலை நாடுகள், வல்லரசுகள் ஆகியன எதிர்நோக்கவுள்ளன என்று எதிர்வுகள் கூறுகின்றன.

வருங்காலம் எத்தகையதாக அமையும் என்பதைக் கூறமுடியாது. அதனால் நாங்கள் எமது மத, அற, மனிதாபிமான ரீதிகளான பின்னணியை பேணிக்கொண்டு தொழில்நுட்ப ரீதியாக முன்னேறுவதே உசிதம் என்று நினைக்கின்றேன்.

போர்க்காலத்தில் தொழில்நுட்பத் திறனோடு எங்கள் இளைஞர், யுவதிகளால் கட்டப்பட்டிருந்த பலதையும் இன்று நாம் அழித்துவிட்டுள்ளோம். அத்தனை தொழிற்றிறனும் தொழில் வல்லமையும் பொறுமையும் சேர்ந்து உருவாக்கிய இந்த இயல்பியல் அதிசயங்கள் கண்காணாமற் போயுள்ளன’ என்றார்.

இதேவேளை ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் சி.வி.விக்னேஸ்வரன் உரையாற்றுகையில்,

‘மீண்டுமொருமுறை ஒட்டுசுட்டான் பிராந்தியத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன். சென்ற முறை வந்தபோது இங்கு நடக்கும் நிகழ்வுகளை பார்வையிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. எமது வளங்கள் எவ்வாறு சூறையாடப்படுகின்றன என்பதை கண்கூடாகக் கண்டேன். சுமார் 40 அடி ஆழத்திற்கு கருங்கல் வெட்ட அனுமதிப்பத்திரம் எடுத்து விட்டு சுமார் 135 அடி ஆழம் வரையில் அகழ்வு நடந்துள்ளதாக அறிந்தேன்.

அதற்கு அனுமதி கொழும்பிலிருந்து கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அது பற்றி ஆராயுமாறு எமது அலுவலர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருங்கல் வடமாகாணத்திற்கு வெளியே கொண்டு செல்லப்படுவதாகவும் அறிந்தேன். ஆக மொத்தம் எமது வளங்களை வடமாகாணத்திற்கு வெளியிலிருந்து வந்தோர் எமது மாகாணத்திற்கு வெளியே எடுத்துச் செல்வதை அறிய நேரிட்டது.

அடுத்து ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை மீண்டும் இயக்கி உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களைக் கொடுப்பதைத் தடுக்க எவ்வாறு அரசியல் உள்ளீடு காரணமாய் அமைந்துள்ளது என்று அறிந்தேன்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பூநகரியருகே வெள்ளாங்குளத்தில் கணேசபுரம் என்ற பகுதியில் பண்ணை ஒன்றை இராணுவம் எடுத்து நடத்துகின்றது. 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கென பயிர்ச் செய்கைக்காக தலா இரண்டு ஏக்கர் படி 500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அப்போதைய மகாவலி அமைச்சரால் வழங்கப்பட்டன.

ஆனால், அவர்களுக்கு அதற்கான ஆவணங்கள் வழங்கப்படவில்லை. அக்காலத்தில் இருந்து அவ் இளைஞர், யுவதிகள் அக்காணியில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

1990ம் ஆண்டு அப்பகுதியில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக அந்த இளைஞர், யுவதிகள் அப்பகுதியை விட்டு இடம்பெயர்ந்து சென்றனர். 1990ம் ஆண்டு தொடக்கம் 2008ம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் விடுதலைப் புலிகள் இக்காணிகளில் விவசாய நடவடிக்கைகளை தொடர்ந்ததோடு வெள்ளாங்குளம், சேவாக்கிராமம், பாலியாறு, தேவன்பிட்டி, மூன்றாம்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 250 இற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அங்கு வேலைவாய்ப்பினை வழங்கி ஆண்களுக்கு 600 ரூபாவும் பெண்களுக்கு தலா 500 ரூபாவும் ஊதியமாக வழங்கி அங்கு பழவகைப் பயிர்ச் செய்கை மற்றும் மரக்கறிப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டிருந்தனர்.

2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் அரசானது அக்காணிகளைக் கையேற்று சி.ஐ.சி. நிறுவனத்திற்கு வழங்கியது. ஆனால் விரைவிலேயே அக்காணி இராணுவக் கட்டுப்பாட்டினுள் ஏற்கப்பட்டது. உள்ளூர் மக்கள் அக்காணிக்குள் தற்பொழுது போகமுடியாதுள்ளது. இக்காணிகள் வழங்கப்பட்ட மன்னார் பிரதேச மக்கள் தற்போதும் அப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்தும் கூட தமக்கு ஆரம்ப காலத்தில் வழங்கப்பட்ட காணிகளை தாம் எடுத்துப் பயிர் செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள்.

இராணுவம் தொடர்ந்து வடமாகாணத்தில் இருந்து வருவதால், எம்மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் மற்றுமொரு அவலம் இது. இது பற்றி நாம் யாவரும் கரிசனை எடுத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எமது மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு போரின் பின்னர் அவர்களுக்காக ஆவண செய்யாதிருப்பதால் எம்மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் மோசமாகி வருகிறது’ என்றார்.

Related Posts