யாழ். மாவட்டத்தில் தற்போது அதிகரித்திருக்கின்ற போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்பத்துவதற்கு அனைவரும் இணைந்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ். மாநகர சபையினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் மாதாந்தக்கூட்டம் மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதன் போது, போதைப் பொருட்களினால் எதிர்காலச் சமூகத்தினர் பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதிலிருந்து பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் சபையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக யாழ்.நகர் உள்ளிட்ட பிரதேசங்களில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருக்கின்றது. இதில் குறிப்பாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளன.
இவ்வாறு போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட நிலையங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. யாழ் நகரை அண்டிய பிரதேசமொன்றில் போதைப்பொருள் வில்லைகள் விற்பனை செய்த நிலையங்கள் இரண்டு கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன.
எனவே இவ்வாறான நிலையங்களைக் கண்டுபிடித்து இந்தப் பாவனையை இல்லாதொழிக்க வேண்டும். இதனை சுகாதாரப் பிரிவினர் மட்டுமல்லாமல் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.
எனவே சமூகத்தில் அக்கறையுடையவர்கள் அனைவருமாக இணைந்து எந்தவித பாகுபாடுகளுமின்றியும் செயற்பட வேண்டும். இருந்தும் இவ்வாறான சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக நவடிக்கை எடுப்பதன் மூலமாகவே நல்லதோர் எதிர்கால சமுதாயத்தை உருவாக்க முடியுமென்றும் என சபையில் மேலும் தெரிவிக்கப்பட்டது.