Ad Widget

போதைப்பொருட்கள் குறித்து அவதானமாக இருங்கள்! – மன்னாரில் முதலமைச்சர் அறிவுரை

அவசர உலகத்தில் திடீர் பணக்காரர்களாக வருவதற்கே விரும்புகின்றார்கள் இவ்வாறு தெரிவித்தார் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

மன்னாரில் எருக்கலம்பிட்டி பாடசாலையில் தொழிநுட்ப கூட கட்டடங்களை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சீரிய வாழ்க்கை முறை, ஒழுக்கம், வர்த்தகத்தின் உண்மைத்தன்மை, மார்க்கத்தின் வழிமுறை அனைத்தையுந் தொலைத்து விட்டு என்ன இழிதொழில் செய்தாவது திடீர் பணக்காரர்களாக மாறிவிட வேண்டும் என்ற துடிப்பில் பலர் இருக்கின்றார்கள். தமது பிள்ளைகளையே இழந்துவிடக் கூடிய போதைப் பொருள் கடத்தல், மது பாவனை போன்ற தொழில்களை சிலர் மேற்கொள்வதன் மூலம் நாம் பாரிய பின்னடைவுகளையும் பயங்கர பின்விளைவுகளையும் விரைவாக எதிர்நோக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

இதுவரை காலமும் மிகச் சிறப்பாக வாழ்ந்து வந்த எமது மக்கள் மத்தியில் கஞ்சாப் பாவனை எவ்வாறு பரவியது? இதற்கான காரணம் யாது? எங்கிருந்து இவை எடுத்து வரப்படுகின்றன? என்ற பல கேள்விகள் எம்முன் எழுகின்றன. தினசரிப் பத்திரிகைகளை பார்த்தீர்களாயின் ‘மாதகலில் நூறு கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது’. ‘மன்னாரில் கஞ்சா களஞ்சியம் கண்டுபிடிப்பு’ என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இவை எமது மனத்திற்கு மிகுந்த வேதனையைத் தருகின்றது. மாதகலிலும் மன்னாரிலும் உள்ள மக்கள் என்ன கஞ்சா செடியா பயிரிடுகின்றார்கள்? யாரோ அவற்றை இங்கெல்லாம் அறிமுகப்படுத்துகின்றார்கள் என்பது தான் உண்மை.

இந்நிலை மாற்றப்பட வேண்டும். இல்லையேல் நாம் அனைவரும் எமது வருங்கால சந்ததியினரைத் தொலைத்தவர்களாக மாறிவிடுவோம். எனவே அன்பார்ந்த பெற்றோர்களே, மாணவ மாணவியர்களே நீங்கள் இவை குறித்து மிகவும் உன்னிப்புடன் செயற்பட வேண்டிய காலம் இது. போதைப் பொருட்கள் பற்றி மிகவும் கவனமாக இருங்கள். அவற்றோடு எந்த விதத்திலும் சம்பந்தப்படாதீர்கள். சம்பந்தப்படுபவர்களைத் தடுத்து நிறுத்துங்கள். பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளில் ஏதாவது மாற்றங்கள் தென்பட்டால் அவை குறித்து மிக அவதானமாக நெருங்கி ஆராயுங்கள். அதற்காகப் பிள்ளைகளைக் கடுமையாக கண்டித்து விடாதீர்கள்.

பிள்ளைகளுடன் அன்பாகவும் அரவணைப்புடனும் அதே நேரம் பழக்க வழக்கங்கள் குறித்து கூடிய கண்டிப்புடனும் பிள்ளைகளை வளர்க்க முற்படுங்கள். எங்கள் பிள்ளைகள் தான் எங்களின் உண்;மையான சொத்தும் சுகமும் என்பதை மறந்து விடாதீர்கள். அது போன்று மாணவர்களுக்கும் நான் அறிவுரை ஒன்றை கூற வேண்டும். உங்களுக்குப் பழக்கமில்லாதவர்களுடன் நெருங்கிப் பழக வேண்டாம். அவர்கள் தருகின்ற தின்பண்டங்களையோ அல்லது இனிப்புக்களையோ வாங்க வேண்டாம். வாங்கினாலும் உட்கொள்ள வேண்டாம். ஏனெனில் போதைப் பொருள் பழக்கவழக்கங்களுக்கு உங்களை ஆளாக்குவதற்குப் பல வழிகளிலும் சூத்திரதாரிகள் முயன்று வருகின்றார்கள். நாம் விழிப்பாக இருந்தால் எம்மை எவரும் மாற்றிவிட முடியாது என்ற செய்தியை உங்களுக்குத் தெரிவித்து வைக்கின்றேன்.

இன்றைய இந்த நல்ல நிகழ்வில் திறந்து வைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் தொழில்நுட்பக் கூடம் என்பனவற்றின் உச்சப் பயனை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் உங்கள் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு மாணவர்களும் ஆசிரியர்களும் கடுமையாக உழைக்க வேண்டும்.

சல்லல்லாஹூ அலைவர் சல்லம் அவர்கள் இந்த உலகம் யாரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்ற கேள்விக்குப் பதில் அளித்தார். படித்தவர்களின் கல்வி, பண்பானவர்களின் நீதி, நல்லவர்களின் பிரார்த்தனை, துணிச்சலுடையவர்களின் வீரம் – இவைதான் இந்த உலகைப் பாதுகாத்து வருகின்றன என்றார். ஆகவே எமது இளைஞர் யுவதிகள் கல்வியில் முயன்று முன்னேற வேண்டும், பண்புள்ளவர்களாக வளர வேண்டும், சுற்றியுள்ளவர்கள் மீது கருணைகாட்டக் கூடிய மனப்பாங்கைப் பெற்றவர்களாக மிளிர வேண்டும். அதேநேரத்தில் துணிச்சல் உடையவர்களாகப் பரிணமிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக, எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தில் தொழிநுட்ப பீடம் மற்றும் தொழிநுட்ப ஆய்வுக்கூட கட்டடங்களை வடமாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்துவைத்தார். உயிரியல் ஆய்வு கூடம், இராசாயன ஆய்வு கூடம், கணித ஆய்வு கூடம், பௌதீக விஞ்ஞான ஆய்வுகூடம், தகவல் மற்றும் தொடர்புசாதன தொழிநுட்ப மத்திய நிலையம் உள்ளிட்ட மேலும் பல பிரிவுகள் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இது தொடர்பாக நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன் போது வடமாகாண முதலைமைச்சர் குறித்த பாடசாலையில் பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு நினைவு சின்னம் மற்றும் பரிசில்களை வழங்கினார். இந்த நிகழ்வில் மன்னார் வலய கல்வி பணிப்பாளர் செ.சுகந்தி, வட மாகாண சபை உறுப்பினர் பிறிமுஸ் சிராய்வா, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Posts