போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒத்துழைக்குமாறு வேண்டுகோள்

MAYOR -yokeswareyயாழ். சத்திரச் சந்தியில் போக்குவரத்துச் சமிக்ஞை பொருத்தப்பட்டுள்ளதால், அவ்விடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பொதுமக்களை ஒத்துழைக்குமாறு யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்படி போக்குவரத்துச் சமிக்ஞை பெப்ரவரி 02ஆம் திகதியிலிருந்து செயற்படுவதற்கு ஆரம்பித்தது.

யாழ்ப்பாணத்தில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் வாகன நெரிசல்களால் ஏற்படும் விபத்துக்கள், சீரற்றுள்ள போக்குவரத்து ஒழுங்குகளை கவனத்திற்கொண்டு போக்குவரத்து ஒழுங்குகளைச் சீர்ப்படுத்தி விரைவுபடுத்தவும் விபத்துக்களை தவிர்ப்பதற்கும் வீதிச் சமிக்ஞை யாழ். நகரில் முதன் முறையாக இயங்கவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

2013ஆம் ஆண்டு ஜுலை மாதம் மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்களினால் யாழ். நகரின் முக்கிய சந்திகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சத்திரச் சந்தியில் 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி சமிக்ஞை பொருத்தப்பட்டது. இதற்கான பரீட்சார்த்த நடவடிக்கை கடந்த 02ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டு சமிக்ஞை தற்போது தொடர்ந்து இயங்குகின்றது.

வீதிகளில் பூட்டப்படும் வீதிச் சமிக்ஞை விளக்குகளை பிரதேச அபிவிருத்தி கட்டுமான நிறுவனம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, மத்திய பொறியியல் நிபுணர்கள் பிரிவு ஆகியன இணைந்து பொருத்தி வருவதாக வடக்கின் வீதி அபிவிருத்தித் திட்டப் பணிப்பாளர் மோஷஸ் மரியதாஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.