பொலிஸ் மீது ஊடகங்கள் குற்றஞ்சாட்டுகின்றன – விமலசேன

யாழ். மாவட்டத்தில் பொலிஸார் மீதே ஊடகங்கள் குற்றம் சுமத்திக்கொண்டிருக்கின்றன. மாறாக பொலிஸார் செய்யும் நல்ல விடயங்களை வெளிப்படுத்துவதில்லையென யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (31) ஆதங்கம் வெளிப்படுத்தினார்.

wp-vimala-sena-police

யாழ்.தலைமை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமூகத்துடன் கதைத்து அந்த சமூகத்துக்கு பொலிஸார் என்ன செய்யவேண்டும் என்ற விடயங்களை சொல்லுங்கள். மாறாக எப்போதும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கதைக்காதீர்கள் என்றும் அவர் கோரினார்.

சிறு தவறுகளை பெரிதாக எடுக்க வேண்டாம்

மானிப்பாய் வீதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (30) மாலை இடம்பெற்ற விபத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் ஒருவர் மீது சிவிலில் நின்றிருந்த பொலிஸார் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர்,

விபத்து நடந்த இடத்திற்கு விபத்தை ஏற்படுத்தியவரையும், உடமைகளையும் காப்பாற்ற பொலிஸார் சிவிலில் அவ்விடத்திற்கு செல்ல முடியும். அத்துடன் கலகத்தை கட்டுப்படுத்துவதற்காக கலகம் ஏற்படுத்தியவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொள்ளவும் முடியும்.

அத்துடன், பொதுமக்கள் கூடுவதை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு தள்ளுதல் மற்றும் துரத்துதல் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொள்ள முடியும். இத்தகைய தருணங்களில் ஏற்படும் சில தவறுகளை பெரிதாக எடுக்கவேண்டாம்.

கடமையிலிருக்கும் பொலிஸார் வெற்றிலை சப்பிக்கொண்டு இருப்பது குற்றமாகும் அவ்வாறு நடைபெற்றால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் விமலசேன தெரிவித்தார்.

ஆவா குழுவினர் ஊடகவியலாளர்களுக்கு நண்பரா?

ஆவா குழு தொடர்பில் தொடர்ந்து ஊடகவியலாளர் கேள்வி கேட்பதை பார்த்தால் ஆவா குழுவிற்கும் ஊடகவியலாளர்களுக்கும் தொடர்புகள் இருப்பதாக தோன்றுகிறது என விமலசேன குறிப்பிட்டார்.

ஆவா குழுவின் தலைவர் பிணையில் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எங்கள் பணி குற்றங்கள் செய்பவர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவது. மாறாக நீதிமன்றம் அவ்வாறானவர்களை பிணையில் விடுதலை செய்தால் நாங்கள் என்ன செய்வது என கேள்வி எழுப்பினார்.

பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிட்டால் எனக்கு அழையுங்கள்

குற்றச் செயல்கள் இடம்பெற்று 24 மணி நேரத்திற்குள் பொலிஸார் அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய விடயங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றச் செயல்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டும் அது தொடர்பில் அந்த பொலிஸ் நிலைய பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிட்டால் எனது தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என விமலசேன தெரிவித்தார்.

அதாவது, 0213211257 (021-2222222) என்ற எனது இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறைப்பாடு தெரிவிக்கவும். அவ்வாறு முறைப்பாடு தெரிவிக்கும் போது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தட்டாதெரு சந்தியில் பொலிஸார் கடமையில்

யாழ்.நகர் பகுதியை அண்மித்த கே.கே.எஸ் வீதி தட்டதெரு சந்தியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. அத்துடன், அந்த சந்தி மிக மோசமான சந்தியாகவும் இருக்கின்றது. ஆகையால் அந்த சந்தியில் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக விமலசேன தெரிவித்தார்.