காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தின் கட்டளை பணியகத்தில் கடமையாற்றிய முகாமைத்துவ உதவியாளரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதிமன்றம் திங்கட்கிழமை (08) உத்தரவு பிறப்பித்துள்ளது.
காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய கட்டளை பணியகத்தின் நிதிப்பிரிவில் கடந்த ஆண்டு காலப்பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கவேண்டிய 2 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாயை பணம் மோசடி செய்யப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர்களின் கவனத்தக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணைகளை மேற்கொண்டு, பண மோசடி செய்தார் என அந்த நிதிப்பிரிவில் முகாமைத்துவ உதவியாளர் பிரிவு 2 இல் பணியாற்றி தற்போது, கொழும்பில் அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் சந்தேகநபரைக் திங்கட்கிழமை (08) கைது செய்தனர்.
அவரிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார், கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, வழக்கினை விசாரித்த நீதவான் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை சிறைச்சாலை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
சந்தேக நபர் தொடர்பான வழக்கு விசாரணைகளை மல்லாகம் நீதிமன்றுக்கு அதே திகதி பாரப்படுத்துமாறு, விசேட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.