பொலிஸாரின் விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை! பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்!- யாழ்.வைத்தியர் சங்கம்

யாழ். போதனா வைத்தியசாலை புற்றுநோய் வைத்திய நிபுணர், வைத்திய கலாநிதி என்.ஜெயக்குமாரனின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை என அதனைக் கண்டித்து பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக வைத்தியர் சங்கம் அறிவித்துள்ளது.வைத்தியர் வீட்டின் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பொலிஸாருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனாலும் அவர்களது செயற்பாடுகள் குறித்து எமக்கு திருப்தி இல்லை. விசாரணைகள் தொடர்பில் பொலிஸாரிடம் கேட்ட போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இது தொடர்பில் அறிக்கை அனுப்பியுள்ளோம். எனினும் அங்கிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளர்.

இதனால் எமக்கு இவர்களின் விசாரணையில் திருப்தி இல்லாமல் உள்ளது. இதுவரைக்கும் நாம் அவர்களுக்கு அவகாசத்தை வழங்கியதுடன் நோயாளர்களையும் கவனத்தில் கொண்டு செயற்பட்டோம்.

இருப்பினும் அது நடைபெறவில்லை. இதனால் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளுவதற்கு தீர்மானித்துள்ளோம்.

இது அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கலாம். இருப்பினும் குறித்த காலப்பகுதிக்கு இடையில் எதாவது மாற்றங்கள் நிகழுமாயின் எமது பணிப்புறக்கணிப்பிலும் மாற்றம் ஏற்படும். அதனால் அதற்கான நாளினைக் குறிப்பிட்டுக் கூறமுடியாது எனவும் வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு வடக்கு கிழக்கு மாணத்தில் உள்ள வைத்தியசாலைகளது முழு ஆதரவினையும் பெறவுள்ளோம். அத்துடன் ஆசிரியர் சங்கம் , வணிகர் சங்கம் போன்றவர்களது ஆதரவினையும் நாடவுள்ளோம்.

நோயாளர்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதுடன் எமது பாதுகாப்பினையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும் இதனாலேயே நாம் இப் பணிப்புறக்கணிப்பை நடாத்த தீர்மானித்துள்ளோம்.

அத்துடன் எமது சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் இருவரையும் சங்கத்தில் இருந்து விலக்கி கொண்டுள்ளோம். ஏனெனில் அவர்கள் எமது சங்கத்திற்கு விரோதமாக செயற்படுகின்றனர். இவர்கள் பணிப்பாளருக்கு ஆதரவு தெரிவித்து கையொழுத்துக்களையும் வைத்தியசாலைக்குள் இருந்து பெற்றிருப்பதாக வைத்தியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதனால் இவர்களது செயற்பாடுகள் தொடர்பில் விளக்கம் தருமாறு நேற்று முன்தினம் அவர்களிடம் கேட்டிருந்தோம் ஆனாலும் அவர்களது விளக்கத்தில் எமக்குத் திருப்தி இல்லை.

இதனால் எமது செற்பாடுகளை திருப்திகரமாக முன்னெடுக்க முடியாதுள்ளது. இதனால் அவர்களை எமது சங்கத்தில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என தாய்ச்சங்கத்திற்கு அறிவித்துள்ளோம். அவர்களிடமிருந்து சரியானதொரு பதிலை எதிர்பார்க்கிறோம் என வைத்திய சங்கத்தின் யாழ். கிளை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.