மறைந்த பொருளியல் ஆசான் வரதராஜனின் மகன் பார்த்தீபன் கடத்தப்படவில்லை எனவும், யாழ். நீதிமன்ற கட்டிடம் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு அவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பார்த்தீபன், யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.யாழ். நீதிமன்ற கட்டடம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் பலரிடம் விசாரணைகளை மேற்கொண்டும், கைது செய்தும் வருகின்றனர்.
அதனடிப்படையில் குறித்த காணொளியொன்றில், வரதராஜனின் மகன் பார்த்தீபன் காணப்பட்டுள்ளார். இதனால் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் இவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கென இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விசேட பொலிஸ் பிரிவினர் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, முன்னதாக, மறைந்த பொருளியல் ஆசான் வரதராஜனின் மகன் பார்த்தீபன் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
					



 
												
							 
												
							 
												
							 
												
							 
												
							