வடக்கு மாகாணத்தின் பொருளாதார மையம் எங்கே அமைய வேண்டும் என்பதை முதலமைச்சர் விக்னேஸ்வரனே முடிவு எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எந்த முரண்பாடும் கிடையாது என கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் வவுனியாவில் பொருளாதார மையம் அமைக்க 20 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியது. ஆனால் இதனை ஓமந்தையிலா அல்லது தாண்டிக்குளத்திலா அமைப்பது என்பதில் முரண்பாடுகள் மேலோங்கின.
இந்த நிலையில், இதனை வவுனியாவுக்கு அப்பால் மதவாச்சிக்குக் கொண்டு செல்லவும் திரை மறைவில் சில முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இது தொடர்பில் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதையடுத்து ஜனாதிபதியும், பிரதமரும் பேசி இது குறித்து முடிவெடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் வினா எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் “பொருளாதார மையம் எங்கே அமைய வேண்டும் என்பதையிட்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன்தான் முடிவெடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி அது தொடர்பான தீர்மானத்தை அவர் எடுக்க வேண்டும். அவ்வாறான தீர்மானத்தை அவர் விரைவில் எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்”
மேலும் இவ்விடயத்தில் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் எதுவும் இல்லை. அவ்வாறு இருந்தாலும் இவ்வாறான விடயங்களில் அந்த முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியது எமது கடமை. ஆனால், இவ்விடயத்தில் இறுதி முடிவை எடுக்க வேண்டியவர் முதலமைச்சர்தான்’ எனவும் சம்பந்தன் உறுதியாகத் தெரிவித்தார்.