உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேவையான ஒளடதங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதனூடாக செலவிடப்படும் அந்நிய செலாவணியை சேமிப்பதற்கு நடவடிக்கை……
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒளடதங்களை ஏற்றுமதி செய்யும் பிரதான நாடுகளான அயர்லாந்து, இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூர் மட்டத்திற்கு இலங்கையை கொண்டு வருதல்….
– பசில் ராஜபக்ஷ – தலைவர், பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழு
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டின் ஒளடத தேவையை பூர்த்தி செய்வதுடன், ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு உற்பத்தியை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் இன்று (2020.08.17) இடம்பெற்ற சந்திப்பின்போதே பசில் ராஜபக்ஷ அவர்கள்
இவ்வாறு குறிப்பிட்டார்.
உள்ளூர் ஒளடத தேவையில் 85 வீதத்தினை இறக்குமதி செய்ய அரசாங்கம் ஏற்கனவே பெரும் செலவுகளைச் செய்து வருவதாக சுட்டிக்காட்டிய பசில் ராஜபக்ஷ அவர்கள், உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஏற்றுமதி திறனைக் கொண்ட தொழிற்சாலைகளை தனியார் முதலீட்டாளர்களை கொண்டு நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தை செயற்படுத்துவதற்கு ஒரு மகத்தான ஆணையை வழங்கியுள்ள மக்கள், சுகாதாரத் துறையில் ஒரு தெளிவான மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.
இந்த மாற்றத்தை ஏற்படுத்த சுகாதார துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதித் துறை தொடர்பான நிறுவனங்களின் உதவியை நாடுவதாகவும் பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். ஆடை ஏற்றுமதி துறையில் முன்னணியில் திகழ்ந்த இலங்கை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒளடத ஏற்றுமதி துறையில் முன்னணியில் திகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன எனவும் பசில் ராஜபக்ஷ அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.
குறித்த சந்திப்பின்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஒளடத உற்பத்திகள் வழங்கல்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்னா ஜயசுமனா, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, ஒளடத ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் அசித டி சில்வா, இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் உத்பல இந்திரவன்ச, அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடக பிரிவு
பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவிற்காக