பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமையாவிட்டால் மாங்குளத்தில் அமைக்கப்படும்!

வடமாகாணத்துக்கான பொருளாதார மையம் ஓமந்தையில் அமைக்கப்படாதபட்சத்தில் அது மாங்குளத்தில் அமைக்கப்படும் என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா அமைப்பது என பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின்படி ஓமந்தையில் அமைப்பதற்கு பெரும்பான்மையான நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலே முடிவெடுக்கப்படவேண்டுமெனவும், அந்த முடிவை தான் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம், வட மாகாண நிர்வாக கட்டமைப்பின் கீழ் நிதி நிறுவனம் ஒன்றை அமைத்தல் மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட மூன்று விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் அடங்கிய குழு ஒன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசனையும் கைதடியிலமைந்துள்ள மாகாணசபை கட்டடத்தில் சந்தித்தனர்.

இதன்போது, வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓந்தையில் அமைக்க தவறும் பட்சத்தில் மாங்குளத்தில் அமைக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Posts