பொது எதிரணிக் கூட்டணியில் ததேகூ இன்னும் பங்குபெறவில்லை- சம்பந்தன் பிபிசி தமிழோசைக்கு பேட்டி

இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிடுவதற்கான பொதுக் கூட்டணியில், ‘தற்போதைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்கவில்லை’ என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறியுள்ளார்.

குறித்த பொதுக் கூட்டணிக்குள்ளேயே இன்னும் சில விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட வேண்டியிருப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.பெரும்பாலும் எதிரணியினரை உள்ளடக்கிய பொதுக் கூட்டணியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு அரசாங்கத் தரப்பிலிருந்து வந்திருக்கின்ற அழைப்பை பரிசீலிக்காமல் நிராகரிக்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறினார்.

‘அவர்களுடைய செயற்பாட்டில் எமக்கு திருப்தி இல்லாமல் இருந்தாலும் கூட, அவர்கள் ஓர் அழைப்பை விடுக்கின்ற போது நாங்கள் அதுபற்றி சிந்திக்க வேண்டிய தேவை இருக்கின்றது’ என்றார் சம்பந்தன்.

ஜனாதிபதி தேர்தல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூடி ஆராய்ந்து யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் முடிவொன்றை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் வேட்பாளரை தீர்மானிக்கின்றபோது, தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்கு நியாயமான, நிரந்தரமான, நடைமுறைப்படுத்தக்கூடிய அரசியல்தீர்வு பற்றியும் மக்களின் அன்றாட தேவைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் பற்றியும் கருத்தில் கொள்ளப்படும் என்றும் இரா. சம்பந்தன் கூறினார்.

ஒலி வடிவில் http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/11/141113_tna_presidential_election

-நன்றி பிபிசி