பொதுமக்களுக்கு பொலிஸார் ‘எச்சரிக்கை’

srilanka_policeதொலைபேசி மூலமாக மிரட்டி பணம் பறிக்க முயலும் சம்பவங்களையிட்டு எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில தீய சக்திகள் வர்த்தகர்கள் மற்றும் பிரமுகர்களை தொலைபேசியில் அழைத்து குறித்த முக்கிய நபர்களை கூறி இவர்களை பற்றி குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரித்து வருவதாகவும் இந்த ஆபத்திலிருந்து இந்த பிரமுகர்களை காப்பாற்ற தங்களால் முடியும் என்றும் அதற்கு பிரதியுபகாரமாக தாம் குறிப்பிடும் வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பிலிடுமாறும் கூறுகின்றனர்.

இவ்வாறான சம்பங்களில் பயமுறுத்தப்பட்டவர்கள் அது தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிப்பதில்லை.இதனால் இவ்வாறான மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன என்று சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறினார்.

ஆயினும் இவ்வாறு மிரட்டியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பலர் பொலிஸ் காவலில் உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்கள் பற்றி குற்றப்புலனாய்வு பொலிஸ் 011 -2320141, பயங்கரவாத புலனாய்வு பிரிவு 011 -2321829 அல்லது 011-2422176, 011 -2685151 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு முறையிடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.