பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டினை முன்னிட்டு வாகன பவனி பருத்தித்துறையில் ஆரம்பமானது

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டினை முன்னிட்டு, இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சு என்பவற்றின் அனுசரனையுடன் எம்.ரி.வி. மற்றும் எம்.பி.சி வலையமைப்பு நிறுவனம் என்பன இணைந்து வாகன பவனி ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தது.

oorvalam-1

oorvalam-2

இவ்வாகன பவனி நாட்டின் சகல பகுதிகளூடாகவும் நகர்ந்து தெய்வேந்திரமுனையினை அடையும். அங்கிருந்து காலிமுகதிடலை எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி சென்றடையும். இவ்வாகன பவனியின் ஆரம்ப நிகழ்வு பருத்தித்துறை வெளிச்சவீட்டு பகுதியில் சுப நேரத்தில் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சின் செயலாளர் கலாநிதி சரித்த ஹேரத், இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கட்டுப்பாட்டு அதிகாரி மனுர சாமல் பெரேரா, மகாராஜா முதலீட்டு நிறுவன குழுமத்தின் பணிப்பாளர் நேத்ரா வீரசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

வட மாகாண ஆளுநர் தேசிய கொடி ஏற்றிவைத்தமையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இலங்கை விமானப்படையின் பெல் 212 உலங்குவானூர்தியும் இலங்கை தேசியக் கொடியுடன் பறந்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.