பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது, இன்று முதல் சேவையில்

பொதுச் சுகாதாரப் பரிசோதகர் யாழ்.மாவட்ட ரீதியாக மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தத்துக்கு சுமுகத் தீர்வு காணப்பட்டுள்ளது.

PHI

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று புதன்கிழமை தொடக்கம் பணிக்குத் திரும்புகின்றார்கள். இது தொடர்பான இணக்கப்பாட்டில் இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பிரதிச் செயலாளரும், யாழ். மாவட்டத் தலைவருமான க.சதீஸ், இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்டத் தலைவர் வைத்தியர் தி.ஸ்ரீகரன், வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஒப்பமிட்டனர்.

அந்த இணக்கப்பாட்டின் விவரம் வருமாறு:-

வடக்கு மாகாண சபை 22.05.2014 ஆம் திகதி நடைபெற்ற அமர்வில் முதலமைச்சர் அவர்களின் அனுமதியுடன் நியமிக்கப்பட்ட பத்துப் பேர் அடங்கிய விசேட குழுவின் பரிந்துரைகள், இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

வடமாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் பொதுசுகாதார பரிசோதகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென பிரதேச சபைகளின் தவிசாளர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து இது தொடர்பில் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு வடக்கு மாகாண சபை ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தெல்லிப்பழை பிரதேச சபையில் கடமையாற்றிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர் உடனடியாக செயற்படும் வண்ணம் நல்லூர் பிரதேச சபையினுடைய நிர்வாக எல்லைக்குட்பட்ட நல்லூர் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவிற்கும் அதேவேளை நல்லூர் பிரதேச சபையில் கடமையாற்றிய பொதுச் சுகாதார பரிசோதகர் வலி.வடக்குப் பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட மல்லாகம் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவிற்கும் இடமாற்றப்படுதல், இவர்களுடைய அலுவலகங்கள் அந்தந்தப் பிரதேச சபை அலுவலகங்களில் அவர்களால் வைத்துப் பராமரிக்கப்படலாம்.

மானிப்பாய், கரைச்சி பிரதேச சபைகளில் கடமையாற்றிய பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தொடர்ந்தும் அதே பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட மானிப்பாய் மற்றும் கரைச்சி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் கடமையாற்றுவர். 31.12.2014 திகதி வரையான காலப்பகுதிக்குள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினூடாக மேற்கூறப்பட்ட பிரதேச சபைகளிற்கு ஆளணி உருவாக்க வடக்கு மாகாண சபை சகல நடவடிக்கைகளையும் எடுக்கும்.

அவ்வாறு ஆளணி உருவாக்கப்பட்டால் குறிப்பிட்ட அலுவலர்கள் அந்தந்தப் பிரதேச சபைகளுக்கு விடுவிக்கப்படுவார்கள. ஆளணி உருவாக்க அமைச்சர் திரு.டக்ளஸ் தேவானந்தா முழு ஒத்துழைப்பையும் வழங்குவார் என்று கூறியுள்ளார்.

மேற்படி பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கான அனைத்துக் கொடுப்பனவுகளும் அவர்களின் பணி தொடர்பான விவகாரங்களும் சுகாதார திணைக்களத்தினூடாகவே மேற்கொள்ளப்படும். முதற்காரியமாக கிரமப் படலம் குறித்த பிரதேச வைத்திய அதிகாரிகளுடனும் அப்பிரதேச சபைகளின் தவிசாளர்களுடனும் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட வேண்டும்.

மேற்கொள்ளப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பாக எந்தவொரு பழிவாங்கல் நடவடிக்கைகளும் இடம்பெறாது. பொதுச் சுகாதார பரிசோதகர்கள் புதனன்று (இன்று) வேலைக்குத் திரும்புவர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related Posts