பெற்றோலுக்கு பதில் டீசல்: புதிய முதல்வர் சிவி.க்கு வந்த சிக்கல்!

Vickneswarn-vavuniaவட மாகாண சபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி விக்னேஸ்வரன் நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் வழியில் தனது வாகனத்திற்கு வவுனியாவில் எரிபொருள் நிரப்பிய போது பெற்றோலுக்கு பதிலாக டீசல் நிரப்பப்பட்டதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முதலமைச்சரை அங்கீகரிக்கும் கூட்டத்தினை நிறைவு செய்து கொழும்பு செல்லும் போது வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு 9.15 மணியளவில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனத்தை டீசல் தாங்கிக்கு முன்னாள் நிறுத்தி பெற்றோல் நிரப்புமாறு சாரதியால் கோரப்பட்ட நிலையில் அங்கிருந்த பணியாளரால் பெற்றோலுக்கு பதிலாக டீசல் நிரப்பப்பட்டுள்ளது.

சுமார் 60 லீற்றர் டீசல் நிரப்பட்ட பின்னரே பெற்றோல் வாகனத்திற்கு டீசல் நிரப்பப்படுவதை உணர்ந்து கொண்ட அங்கிருந்தவர்கள் வாகனத்தின் எரிபொருள் தாங்கியை கழற்றி துப்பரவு செய்து மீளவும் பொருத்திய நிலையில் அவர் தனது பயணத்தை தொடர்ந்திருந்தார்.

இதேவேளை, அவருடன் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சரவணபவன், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் ஆகியோரும் இருந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த வவுனியா பொலிஸ் தலைமைய பொறுப்பதிகாரி டி. கே. அபயரட்ண அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொண்டிருந்ததுடன் பாதுகாப்பினையும் வழங்கியிருந்தார்.

அங்கு பிரசன்னமாகியிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் பிரேமரட்ன சுமதிபால சி. வி. விக்னேஸ்வரனுக்கு கைலாகு கொடுத்து கலந்துரையாடியிருந்தார்.