புலிக்கொடியை பறக்க விட்டது யார் ? தேடுகின்றனர் பொலிஸார்

வல்வெட்டித்துறையில் புலிக்கொடி பறந்தமை தொடர்பில் எவரும் கைது செய்ய்படவில்லை புலனாய்வு விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார்.

யாழ். பொலிஸ் தலைமையத்தில் இன்று வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் வல்வெட்டித்துறைப் பகுதியில் ஏற்றப்பட்ட புலிக்கொடி தொடர்பில் யாராவது கைது செய்யப்பட்டுள்ளார்களா என்று ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது. அதன் போதே பிரதிப் பொலிஸ் மா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தீருவில் பகுதியில் உள்ள கடந்த 21 ஆம் திகதி காலை தனியார் தொலைத்தொடர்பு கோபுரத்தில் புலிக்கொடி கட்டப்பட்டு பறந்துகொண்டிருந்த சம்பவம் இடம்பெற்றது.

இனந்தெரியாத நபர்களினால் 20 ஆம் திகதி இரவு புலிக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. எனினும் மறுநாள் அதிகாலை வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற இராணுவத்தினரும் பொலிஸாரும் புலிக் கொடியை அகற்றிச் சென்றனர்.

எனினும் இச் சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. எனினும் புலனாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்.