புலிகள் பயன்படுத்திய நிலம் என்னும் போர்வையில் நில ஆக்கிரமிப்பு செய்யும் படையினர்: சி.சிறீதரன்

sritharanவடமாகாணத்தில் நில ஆக்கிரமிப்புக்களின் தொடர்ச்சியாக கிளிநொச்சி- தொண்டமான்நகர் கிராமத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 15 ஏக்கர் நிலம் படையினரின் தேவைகளுக்காக ஆக்கிரமிக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

வழக்கம்போல் புலிகள் பயன்படுத்திய நிலம் என்னும் போர்வையில் மேற்படி ஆக்கிரமிப்பு இடம்பெறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

கண்ணகைநகர் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட தொண்டமான் நகர் கிராமத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலத்தில் நேற்று படையினர் வேலிகளை அமைத்துள்ளனர். மேலும் அந்த நிலத்தில் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு கணவனையிழந்த பெண்ணையும், அவரது இரண்டு பிள்ளைகளையும் உடனடியாக அங்கிருந்து வெளியேறவேண்டும் எனவும் பணித்துள்ளனர்.

இந்நிலையில் கரைச்சிப் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் எஸ்.நகுலன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் நேரடியாக அங்கு சென்று நிலமைகளை அவதானித்திருக்கின்றார்கள். அதன்படி சுமார் 15 ஏக்கர் நிலத்தை படையினர் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்களை கொண்டு விவசாயம் செய்வதற்கான எடுத்திருப்பதாக கூறியிருக்கின்றனர். இதேபோன்று மேலும் அப்பகுதியில் உள்ள 9 நிலத் துண்டுகளை தாம் எடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளதுடன், அந்தப் பகுதியினை முன்னர் விடுதலைப் புலிகள் பயன்படுத்தினார்கள் எனவும், அதனால் அந்த நிலத்தை படையினரன் தேவைகளுக்காக எடுத்துக் கொள்ளவேண்டும் என தமக்கு உயர்மட்டத்திலிருந்து உத்தரவு கிடைத்துள்ளதாகவும் படையினர் பிரதேச சபை உபதவிசாளருக்கு கூறியுள்ளதாக அவர் எனது கவனத்திற்கு கொண்டுவந்திருக்கின்றார்.

ஏற்கனவே பரவிப்பாஞ்சான், இரணைமாதாநகர் போன்ற பிரதேசங்களில், தமிழ் மக்களுடைய மிக பெறமதியான விவசாய நிலங்கள் மற்றும், மக்களுடைய வாழ்நிலங்கள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல், தங்கள் சொந்த நிலங்களில் விவசாயம் மேற்கொள்ள முடியாமல் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இன்றும் மாற்றிடங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளில் வாழ்கின்றனர்.

இந்நிலையில் சிறிதுகாலம் சர்வதேச அழுத்தங்களால் தணிந்திருந்த நில ஆக்கிரமிப்பும், படைச்செறிவூட்டலும் தற்போது மீளவும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. எனவே இந்தவிடயத்தில் வடக்கு மாகாணசபை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுள்ளதுடன், நில உரிமையாளர்கள் உடனடியாக தொடர்புகளை ஏற்படுத்தி சட்டரீதியான நட வடிக்கைக்கு தயாராக வேண்டும் எனவும் கேட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர், இவ்விடயம் தொடர்பில் சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கையினை தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.