Ad Widget

புலிகளுடன் தொடர்பில்லாத கைதிகளே விடுவிக்கப்படுவார்! – திலக் மாரப்பன

தடுப்புக்காவலில் உள்ள தமிழ் கைதிகள் தொடர்பில் நியாயமான வகையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புலிகளுடன் தொடர்பில்லாத தமிழ் கைதிகள் விடுவிக்கப்படுவர். அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகளின் அடிப்படையில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என்று சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகள் யாரையும் தடுத்து வைக்கவில்லை. ஆனால் இவர்களை அரசியல் கைதிகள் என தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகின்றது. கடந்த காலத்தில் இருந்தே இந்த விடயம் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தொடர்பில் விரைவில் ஒரு ஸ்திரமான தீர்மானம் எடுக்க முடியாதுள்ளது. ஏனெனில் இவர்கள் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் எவ்வாறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் சரியான ஆதாரங்களை ஆராயவேண்டியுள்ளது. இவ்வாறு தடுப்புக்காவலில் உள்ள அரசியல் கைதிகள் ஒருசிலர் மீது குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல் யுத்த காலகட்டத்தில் புலிகளுடன் தொடர்புபட்டிருந்ததையும், குற்றவாளிகள் என்பதை ஒப்புக்கொண்டவர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுப்புக் காவலில் சிலரும் உள்ளனர். ஆகவே இவை தொடர்பில் சரியான விசாரணைகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது. எனவே குற்றம் சுமத்தப்பட்டு அது நிரூபிக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க முடியாது. அவர்களுக்கு பொதுமன்னிப்பு கொடுப்பது எந்த வகையிலும் சாத்தியமற்றது. எனவே புலிகளுடன் தொடர்புடைய நபர்களை சட்ட முறைமைக்கு அமைய தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். அவர்கள் தொடர்பில் மாற்று நடவடிக்கைகளுக்கு வாய்ப்புகள் இல்லை.

ஆனால் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை பிணையில் விடுவிக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகின்றது. எவ்வாறு இருப்பினும் குற்றம் இல்லாத தமிழ் அரசி யல் கைதிகள் தொடர்பில் நியாயமான வகையில் அரசாங்கம் செயற்பட்டு அவர்களின் விடுதலை தொடர்பில் கூடிய அக்கறை செலுத்தும்.

இவர்களை விடுவிப்பது தொடர்பில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ தலைமையில் குழுவொன்று ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தடுப்புக்காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமர் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் உள்ளனர். விரைவில் நாம் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம். பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நாம் செயற்பட்டு வருகின்றோம் எனக் குறிப்பிட்டார்.

Related Posts