புனர்வாழ்வு பெற்றோருக்காக பொருளாதார, சமூக, நலன்புரி இணைப்பு வேலைத்திட்டம்

jaffna_kachari_newஇராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டோரின் நலன் கருதி, ‘புனர்வாழ்வு பெற்றவர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி தொடர்பான இணைப்பு வேலைத்திட்டமொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்காக யாழ்ப்பாணத்தில் காரியாலயம் ஒன்றும் திறக்கப்படவுள்ளது. யாழ். மாவட்டச் செயலாளர் அலுவலகத்திலேயே இந்த காரியாலயம் செயற்படவுள்ளது என்று புனர்வாழ்வு ஆணையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு ஆணையக தலைமைச் செயலகம் மற்றும் புனர்வாழ்வு, சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டிலேயே மேற்படி காரியாலயம் திறக்கப்படவுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வின் பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களுக்காகவே இந்த காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்பில் கண்டறிதல், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்டுக்கு பயனுள்ள ஒரு நற்பிரஜையாக உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டே மேற்படி அலுவலகம் திறக்கப்படவுள்ளது.

இதனூடாக புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள், சிவில் சமூகம், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களினால் ஏதிர்ப்பார்க்கப்படும் வேலைத்திட்டங்களிலும் பார்க்க வியாபித்ததொரு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதே நோக்கமாகும் என புனர்வாழ்வு ஆணையகம் தெரிவித்தது.