புத்தூரில் பெண்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம்

புத்தூர் கிழக்கு மத்திய சனசமூக நிலையத்திற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் இன்று காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

puththoor-girls

சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் இவ் ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரிவயவருவதாவது,

கடந்த செவ்வாய்க்கிழமை (29ம் திகதி) அதே இடத்தினைச் சேர்ந்த அமிர்தலிங்கம் மைதிலி (வயது – 27) என்ற பெண் சடலமாக மீட்கப்பட்டார்.

மேற்படி பெண் திங்கட்கிழமை (28) இரவு தொலைபேசியில் உரையாடியவாறு வீட்டிற்கு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை,

இதனையடுத்து மேற்படி பெண்ணின் உறவினர்கள் இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மறுநாள் அவ்விடத்திற்கு மாடு கட்டச் சென்ற ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வயல் கிணற்றிலிருந்து மேற்படி பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட பெண்ணின் தந்தையாரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்துக்கூறுகையில்,

யாழ்.மாவட்டத்தில் கடந்த காலங்களில் 5 பெண்கள் காணமல்போயுள்ளனர். இவர்களில் இருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டதுடன் மேலும் மூவரின் நிலைமை தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.

இதற்கு எதிராக பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதன் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லாமல் செய்ய முடியும்’ என தெரிவித்துள்ளனர்.