இப்படியும் ஒரு புதுவருட வரவேற்பு!

நேற்றைய இரவு புதுவருட வரவேற்பு கொண்டாட்டங்கள் வழமைபோலவே வெடிச்சத்தங்களுடனும் குடி கும்மாளங்களுடனனும் அமைந்திருந்தது. சிலருக்கு அது வெறியாட்டமாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி பலாலி வீதியில் திருநெல்வேலி சந்தி மதுபானசாலைக்கு அருகில் உள்ள பணிக்கர் ஒழுங்கை முகப்பு குடிவெறியர்களால் சின்னாபின்னப்பட்டு காட்சியளிக்கிறது.

pannekkar-lane (1)

பிரதேசசபையினால் நாட்டப்பட்டிருந்த ஒழுங்கை பெயர்ப்பலகை முறித்து பிடுங்கப்பட்டு அருகில் வைக்கப்பட்டிருக்கிறது முகப்பு வீட்டின் மதில் பாதியளவுக்கு இடித்து வீழ்த்தப்பட்டுள்ளது,அதேவேளை அவ் வீட்டின் வளவுக்குள் நாட்டப்பட்டிருந்த கணினி பயிற்சி நிலையத்தின் பதாகை கிழித்து எறியப்பட்டிருக்கின்றது. வீதியில் நிறைய வெடிகள் கொளுத்தப்பட்டதற்கான எச்சங்கள் காணப்பட்டுள்ளன.

கொண்டாட்ட காலங்களில் பொதுவாகவே அதிகரிக்கப்பட்டிருந்த பொலிஸ்பாதுகாப்புக்கு மத்தியில் இவ்வாறான காட்டுமிரண்டித்தனமான செயல்களும் அரங்கேறியுள்ளன. இது யாழ்ப்பாணத்தின் ஒரு பிரதான வீதிச்சந்தியில் நடைபெற்றுள்ள அலங்கோலம் . இவ்வாறு வேறு இடங்களிலும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் எமக்கு தகவல்கள் சரியாக கிடைக்கவில்லை.

pannekkar-lane (2)

மேற்படி ஒழுங்கையில் முன்னர் நீண்டகாலமாக இயங்கி வந்த கணினி நிறுவனத்தின் பெயர்ப்பலகையும் சில மாதங்களுக்கு முன்னதாக பிடுங்கி எறியப்பட்டு காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது அந்நிறுவனம் தற்போது இடம்மாற்றம் செய்யப்பட்டதனால் அவர்கள் தமது பெயர்பலகையினை ஏற்கனவே சில வாரங்களுக்கு முன் அகற்றியிருந்தனர் . அதன்காரணமாக தமது பெயர்பலகை இந்த காட்டுமிராண்டித்தனமான செயல்களில் இருந்து தப்பிவிட்டதாக அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

pannekkar-lane (3)

வழமையாகவே பகல்வேளைகளிலும் இரவு வேளைகளிலும் இந்த ஒழுங்கையில் மதுப்பிரியர்களின் அட்டகாசம் காணப்படுவது வழமை.அருகில் பிரதான வீதியில் உள்ள மதுபானசாலையில் வாங்கிய மதுபானங்களை பருகுவதற்கு ஒதுங்கும் இடமாகவும். பருகியபின் சிறுநீர்கழிப்பதற்கு ஒதுங்கும் இடமாகவும் பயன்பட்டு வந்துள்ளது. இவ்வொழுங்கையின் எதிர் ஒழுங்கையில் பாடசாலை ஒன்று இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஒழுங்கையில் ஒரு மைதானம் இருப்பதும் அதற்கு நிறைய இளைஞர்கள் விளையாடுவதற்கு வந்து போகின்ற போதிலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்நது இடம்பெறுவது வேதனைக்குரியது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கி்றனர்

அருகில் உள்ள மதுபானசாலைதான் இந்த காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முக்கியகாரணமாக அமைந்திருப்பதாகவும் இதுதொடர்பில் பிரதேச சபையும் பொலிசாரும் விரைந்துநடவடிக்ககை எடுக்கவேண்டும் எனவும் ஒழுங்கை வாசி ஒருவர் எமது இணையத்தளத்திற்கு கருத்து தெரிவித்தார்