புதுமுகங்களின் வருகை கட்சிக்கு வலிமை சேர்க்கிறது: அலன்ரின்

uthayan-alasteen-epdpஎமது கட்சியின் புனரமைப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில் பல புதிய முகங்களின் வரவுகள் எமக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருவதுடன் அது எமது நடைமுறை சாத்தியமான அரசியல் பயணத்திற்கு பாரிய உந்துசக்தியாகவும் அமைந்துள்ளதாக ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பியின் யாழ். அலுவலகத்தில் யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் நெடுந்தீவு மக்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது கட்சியை புனரமைத்து அதன் செயற்பாடுகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது எமது கட்சியின் செயலாளர்கள் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் நீண்டகால நோக்கமாக இருந்து வந்தது. இதனடிப்படையில் யாழ். மாவட்டத்தில் நாம் கட்சிப் புனரமைப்புப் பணிகளை தற்போது ஆரம்பித்துள்ளோம்.

புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்த நாள் முதல் தொடர்ந்து பல புதிய முகங்கள் கட்சிக்கூட்டங்களில் கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எமக்கு வழங்கி வருகின்றனர். இது எமக்கு பாரிய பலத்தை அளித்துவருகிறது.

இந்த வகையில், எதிர்வரும் காலங்களில் எமது மக்கள் நலன்சார்ந்த பணிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு இம்மக்களது ஒத்துழைப்புக்கள் எமக்கு பெரிதும் உந்துசக்தியாக அமையும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.