புதிய கட்டிடங்களில் வலதுகுறைந்தவர்கள் உள்நுழைவதற்கு வசதி செய்யப்படவேண்டும்

emalda_gaபுதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற அனைத்து கட்டிடங்களிலும் வலதுகுறைந்தவர்கள் உட்பிரவேசிக்கக் கூடியதான வசதிகளை 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் செய்து கொடுத்தல் கட்டாயமானதென சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமாரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சுற்றுநிரூபம் நாடெங்குமுள்ள அரச,தனியார் கட்டிடங்கள், பிரபல்யமான இடங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் இடங்களுக்கும் நேற்று செவ்வாய்க்கிழமை இமெல்டா சுகுமாரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அச்சுற்றுநிரூபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வலதுகுறைந்த நபர்களுக்கு உட்பிரவேசிப்பு வசதிகளை வழங்குதல் தொடர்பாக 2006 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி 1467/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலமாக விடுக்கப்பட்ட அறிவித்தல் திருத்தப்பட்டு 1619/24 என்ற இலக்கத்தில் 2009.09.18 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலமாக கட்டாயமானதாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற அனைத்து கட்டிடங்களிலும் அங்கவீனமுற்றவர்கள் உட்பிரவேசிக்கக் கூடியதாக வசதி ஏற்படுத்தப்படல் கட்டாயமானதாகும்.

அங்கவீனமுற்ற நபர்களின் அமைப்பு உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இலக்கம் கு.சு 221/2009 இற்கமைய 2013.06.17 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் 2014.10.16 ஆம் திகதிக்கு முன்னர் உட்பிரவேசிக்கும் வசதி ஏற்படுத்தப்படுதல் வேண்டும்.

அவ்வாறு ஏற்படுத்த தவறுமிடத்து அக் கட்டிடங்களை நிர்வகிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார் அறிவித்துள்ளார் என அச்சுற்று நிரூபத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.