யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர் குழுவினருக்கும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பலிஹக்கார ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், சுன்னாகத்தை அண்டிய பிரதேச நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் நீரில் கலந்த விவகாரம், பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்டது.
இதேவேளை வீரசிங்கம் மண்டபத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மாவை சேனாதிராஜா, எங்களுடைய மக்களின் அன்றாட பிரச்சினைகளை ஏக்கங்களை வேதனைகளை தீர்த்து வைக்கவே இந்த ஆட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் அமைச்சு பதவிகளுக்காக அல்ல எனவும் தெரிவித்தார்.