புகுஷிமா அணு உலை அருகே பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் பசிபிக் கடற்கரையோரம் ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை, அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

6.8 ரிச்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், தலைநகர் டோக்கியோவில் இருந்து வட-கிழக்காக உள்ள நமி பகுதியில் பூமியின் சுமார் 10 கிலோ மீற்றர் ஆழத்தில், உள்ளூர் நேரப்படி அதிகால 4.22 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

jappan-tsunami

நிலநடுக்கத்தையடுத்து கடலில் ஒரு மீற்றர் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழலாம் என்பதால் புகுஷிமா அணு உலை அமைந்திருக்கும் கடலோரப் பகுதியில் உள்ள இவாட்டே, மியாகி ஆகிய நகரங்களுக்கு ‘சுனாமி’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இவாட்டே நகர மக்களை உடனடியாக தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பேரிடர் மேலாண்மை குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்த நிலநடுக்கத்தால் புகுஷிமா அணு உலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்த அணு உலையை நிர்வகித்து வரும் டோக்கியோ மின் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு இதே பகுதியில் அடுத்தடுத்து உருவான நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியானது நினைவிருக்கலாம்.