‘பிழைப்பை நடத்தவே உன்னிக்கிருஷ்ணன் மன்னிப்பு கோரியுள்ளார்’- இப்படிக்கூறுகிறார் டக்ளஸ்

வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடம் தனது பிழைப்பை நடத்தும் சுயநல நோக்கத்திற்காகவே தென்னிந்திய பாடகர் உன்னிக்கிருஷ்ணன் பொதுமன்னிப்பு கோரியுள்ளார் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளுக்கான விருந்தில் கலந்துகொண்ட அமைச்சர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.

இந்தியதுணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண சபையின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து நடத்திய சுக அனுபவம் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததினால் தான் அந்த நிகழ்வில் கலந்துகொண்டதாகவும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களிடம் தனது பிழைப்பை நடத்துவதற்காக ‘உன்னி’ இவ்வாறு கருத்துக்களை முன்வைத்து பொதுமன்னிப்பும் கோரியுள்ளார் எனவும்  அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் வடபகுதியில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிடுவதற்காக இங்கு வருகைதந்தள்ளதாகவும் இங்கு நடைபெறுகின்ற அபிவிருத்தித் திட்டங்களை இவர்கள் பாராட்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts