பிள்ளைகளுக்கு அப்பாவும் எனக்கு கணவரும் ஒரு முறைதான் கிடைப்பார் – கணவனைத் தொலைத்த பெண் சாட்சியம்

காணாமற்போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப்பதிவுகள் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிவரை நடைபெற்றது.

நேற்று சாட்சியப்பதிவுகளுக்காக கரைதுறைப்பற்று பிரதேச செயல பிரிவில் உள்ள 12 கிராம சேவகர் பிரிவை சேர்ந்த 60 பேர் சாட்சியப்பதிவுக்கு ஆணைக்குழுவால் அழைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுள் 45 பேர் சாட்சியங்களை பதிவு செய்தனர். மேலும் ஆணைக்குழுவிற்கு 85 பேர் புதிய விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர் என ஆணைக் குழு ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது.

2007,2008,2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணமற்போனவர்கள் தொடர்பில் இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே சாட்சியமளித்தனர்.

karaithurai-missing

கடலுக்கு சென்ற எனது கணவரை கடற்படை பிடித்துச் சென்றது. இதனை அவருடன் பிடிபட்ட வயதானவர்கள் இருவர் என்னிடம் தெரிவித்திருந்தனர் என பெண்ணொருவர் சாட்சியமளித்தார். இது தொடர்பில் மேலும் சாட்சியமளிக்கையில் – “எனது கணவருடன் கடலில் பிடிபட்ட வயதானவர்களை கடற்படை விடுவித்துவிட்டு எனது கணவரை மாத்திரம் கொண்டு சென்றுள்ளது. “இதேவேளை கணவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கடற்படையினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகையில் செய்தி பிரசுரமாகி இருந்தது. ஆனால் இதுவரை எனது கணவர் குறித்த தகவல்கள் எதுவும் எனக்கு தெரியாது. “எனக்கு வேறு உதவிகள் இல்லை. நான் கடை ஒன்றில் வேலை செய்து தான் பிள்ளைகளைப் படிப்பிக்கிறன். நான் வெளிக்கிட்டால் மாலை 6மணிவரை எனது பிள்ளைகளுக்கு என்ன நடக்கும் என்று கூட தெரியாது. “அவர்களை சாப்பாடு மற்றும் கல்வி விடயத்தில் கூட நான் கவனிப்பது இல்லை. பாடசாலைகளில் நடைபெறும் கூட்டங்களுக்கும் போறது இல்லை. இதனால் எனது பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றனர். பிள்ளைகளுக்கு அப்பாவும் எனக்கு கணவரும் ஒரு முறை தான் கிடைப்பார். எனக்கு எனது கணவர் வந்தால் தான் எனது குடும்பத்தை சரியாக வழிநடத்த முடியும். எனது கணவர் உயிருடன்தான் இருக்கிறார்” – என்று சாட்சியமளித்தார்.

மேலும் இராணுவம் உங்களுக்கு உதவிகள் செய்கின்றதா என ஒருவரிடம் ஆணைக்குழு கேள்வி எழுப்பிய வேளை – “எங்களுக்கு பயம் நாங்கள் ஒன்றும் கேட்பதில்லை. நாங்கள் எப்போதும் பயந்து வாழ்ந்திட்டம்” என பதிலளித்தார். மற்றொருவர் சாட்சியமளிக்கையில் – “இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரின் ஷெல் வீச்சு உக்கிரமாக இருந்தது. இதனால் எனது கணவர் காயமடைந்தார். அவரை மாத்தளன் வைத்தியசாலையில் சேர்த்திருந்தோம். அடுத்த நாள் காலை வைத்தியசாலையினை பார்க்கும் போது ஷெல் விழுந்து உடைந்து போய் இருந்தது. இரத்தத்திற்குள் சடலங்களும் சிதறிக்கிடந்தன. எனினும் கணவரை காணவில்லை . “இதுவரை தகவல் தெரியாது. எனக்கு 8 பிள்ளைகள் அவர்களில் 5 பேர் ஷெல் வீச்சில் இறந்து விட்டனர். நான் இளைய பிள்ளையுடன் இருக்கின்றேன்” என்றார்.

“இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் போன எங்களை இராணுவம் கட்டை கொண்டு கலைத்தது. இதனால் காயப்பட்ட எனது மனைவியை தொலைத்து விட்டேன்” என மனைவியை இழந்த ஒருவர் ஆணைக்குழு முன்னர் சாட்சியமளித்தார். “இராணுவ கட்டுப்பாட்டுக்குள் சென்ற பின்னரும் 3 நாட்கள் உணவின்றி இருந்தோம்” என தாய் ஒருவர் சாட்சியமளித்தார்.

மேலும் “எனது மகனை வலைஞர் மடத்தில் காணவில்லை . இதனால் எனது மகனை பார்க்க இறுதி வரை இருந்தோம். இறுதிவரை வரவில்லை. இப்போது நான் தனிமையாக இருக்கின்றேன். எனக்கு அரசினால் வழங்கப்படும் உதவிகள் தனி ஆள் என்பதால் வழங்கப்படவில்லை” என மிகுந்த கவலையுடன் சாட்சியமளித்தார்.

“விடுதலைப் புலிகளுடன் இருக்கும் போது எனது மகளுக்கு எதுவும் நடக்கவில்லை. இராணுவ கட்டுப்பாட்டுக்கு வந்தே காணாமல் போனார்” என இன்னொரு தாயார் உருக்கமாக சாட்சியமளித்தார் . எனினும் விடுதலைப் புலிகளால் வீட்டுக்கு ஒருவர் என கொண்டு செல்லும் போது விடுதலைப் புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் என சாட்சியத்தில் பதிவு செய்யப்பட்டாலும் பெரும்பாலான சாட்சியங்கள் இறுதியில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள்ளும் ஓமந்தையிலும் வைத்தியசாலையிலும் கண்டனர் என்றே சாட்சியமளித்தனர்.

இதேவேளை 4ஆம் நாள் பதிவுகள் இன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலகர் பிரிவில் இடம்பெறுகிறது. இதற்காக 7 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 50 பேர் ஆணைக்குழுவால் அழைக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor