பிரிந்து செல்வதா இல்லையா என்பதனை வடக்கு கிழக்கு மக்கள் நிர்ணயிக்க வேண்டும் – சுரேஸ்

ஸ்கொட்லாந்து பாணியிலான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் கோரியுள்ளார்.பிரிந்து செல்வதா இல்லையா என்பதனை வடக்கு கிழக்கு மக்கள் நிர்ணயிக்கக் கூடிய வகையிலான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

suresh

கடந்த வாரம் ஸ்கொட்லாந்தில் நடைபெற்றதனைப் போன்றதொரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி அதன் மூலம் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக அடிப்படையிலான தீர்வுத் திட்டமாக இது அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுடன் தொடர்ந்தும் இணைந்திருப்பதா அல்லது விலகிச் செல்வதா என்பதனை நிர்ணயிக்கும் வகையில் ஸ்கொட்லாந்து மக்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தீர்மானிக்கக் கூடிய ஓர் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறெனினும், அரசாங்கம் இவ்வாறான தேர்தல் ஒன்றை நடாத்தும் என்பதில் சந்தேகம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆயிரக் கணக்கான வடக்கு கிழக்கு மக்கள் இவ்வாறான ஓர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் வரையில் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து ஏனைய மாகாணசபைகளுக:கு ஒருவிதமாக சலுகை வழங்கும் மத்திய அரசாங்கம் வடக்கு மாகாணசபையை உதாசீனம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியல் பிரச்சினைக்கு காத்திரமான ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்பட வேண்டும் என்பதனை மக்கள் நிர்ணயிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Posts