பதவியைப் பொறுப்பேற்கையில் யாராவது குழப்பம் விளைவித்தால் அல்லது பதவியைப் பொறுப்பேற்க விடாது தடுத்தால் கல்வித் திணைக்கள அதிகாரிகளின் உதவியை உடன் நாடி பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.கோத்தபாய ஜெயரட்னே புதிய அதிபருக்கு ஆலோசனை வழங்கினார்.வேம்படி மகளிர் கல்லூரி அதிபராக வேணுகா சண்முகரத்தினம், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டார். நேர்முகப் பரீட்சைகளின் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலையிட்டதால் புதிய அதிபர் பொறுப்பேற்பதில் தடங்கல்கள் ஏற்பட்டன.
பதவியேற்றகச் சென்ற அவர், தற்போதைய பதில் அதிபர் ராஜினி முத்துக்குமாரனின் ஒத்துழைப்பின்மையால் பதவியைப் பொறுப்பேற்க முடியாது திரும்பினார்.
இதனையடுத்து இந்த விடயத்தை, வெளிநாடுகளில் வாழும் கல்லூரிப் பழைய மாணவிகள் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தனர் என்று யாழ்ப்பாணத்திலுள்ள பழைய மாணவிகள் சங்கம் தெரிவித்தது.
“இதுவிடயமாகத் தெரியப்படுத்திய போது ஜனாதிபதி, கல்வி அமைச்சுக்கு விசேட அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்” என்று சங்கத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இந்தப் பின்னணியில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவை நேற்றுச் சந்தித்துப் பேசினர் புதிய அதிபர். கல்லூரி பழைய மாணவிகள் சங்க நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
இந்த விவகாரத்தில் தேவையற்ற அரசியல் தலையீடுகள் இருப்பதைப் புரிந்து கொண்ட கல்வி அமைச்சர், உடனடியாகத் இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறு தனது செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
“பாடசாலையில் பதவியில் இருக்கும் அதிபர்கள் தமது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கு வடக்கிலும் தெற்கிலும் தற்போது அதிகரித்துவிட்டதாக” இந்தச் சந்திப்பின்போது கல்வி அமைச்சர் கவலை தெரிவித்தார் என்று கல்லூரி பழைய மாணவிகள் சங்கப் பிரதிநிதி ஒருவர் உதயனுக்குத் தெரிவித்தார்.
அதன் பின்னர் வேணுகா சண்முகரத்தினம் மற்றும் பழைய மாணவிகள் சங்க நிர்வாகிகள் கல்வி அமைச்சின் செயலாளரைச் சந்தித்துப் பேசினர். பதவியை உடனடியாகப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.