இலங்கையில் உள்ள பிரதேச செயலகங்கள் ஊடாகக் கடவுச் சீட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயக திணைக்களம் சகல பிரதேச செயலகங்களுக்கும் அறிவித்துள்ளது.
கொழும்புக்கு வெளியே வசிக்கும் மக்கள் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்வதை இலகுவாக்குவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்கள் கண்டி, மாத்தறை, வவுனியா ஆகிய இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே பிரதேச செயலகங்கள் ஊடாக நடாத்தப்பட்டு வந்த கடவுச்சீட்டு ஏற்கும் பிரிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்கள் சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பங்களில் விண்ணப்பதாரர்களைப் போன்றே அவர்களது ஆவணங்களின் மூலப்பிரதிகளும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலக பிரதிக் கட்டுப்பாட்டாளர்களிடம் முன்வைக்கப்படாமையால் விண்ணப்பதாரர்களதும் அவர்களின் ஆவணங்களதும் உண்மைத் தன்மையை பரீட்சித்தலில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
அது மட்டுமல்லாது அண்மைக் காலங்களில் இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் விண்ணப்பதாரர்கள் வெளிநாடுகளில் வசிப்பவர் என்று எல்லைக் கட்டுப்பாட்டு தரவுகளின் பரிசீலனையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பிரதேச செயலகங்கள் ஊடாக கடவுச்சீட்டு விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்வது பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் நடை முறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரை கண்டி, மாத்தறை மற்றும் வவுனியா நகரங்களில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள பிராந்திய அலுவலகங்களுக்கும் கொழும்பில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தும்படி பிரதேச செயலர்களுக்கு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயக திணைக்கள கடவுச் சீட்டு கட்டுப்பாட்டாளர் எச்.எம்.பி.பண்டாரா அறிவித்துள்ளார்.
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் திணைக்களத் தினால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் பிரதேச செயலகத்தில் கடவுச் சீட்டு விண்ணப்பப்படிவங்கள் கையேற்பது நிறுத்தப்பட்டுள்ளது என்றும் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிப்போர் வவுனியாவில் உள்ள குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு பிராந்திய அலுவலகத்தில் அல்லது கொழும்பில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள தலைமை அலுவல கத்துக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்குமாறும் கூறியுள்ளார்.