பிரதமர் வேட்பாளர் பதவியை கேட்டு வாங்கமாட்டேன்! – மஹிந்த கூறுகின்றார்

பிரதமர் வேட்பாளர் பதவி உட்பட எதையும் தான் கேட்டுப்பெறப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தப்பட்ட பேச்சு வெற்றியா அல்லது தோல்வியா என தற்போது கூறமுடியாது எனவும், மேலும் பேச்சுகள் நடத்தப்பட்ட பின்னரே அது பற்றிக் கூற முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை கொழும்பு நாரஹேன்பிட்டியவிலுள்ள அபயராம விகாரை வளாகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் நடைபெற்ற பேச்சு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“எம்.பிக்கள், மதகுருமார்கள் ஆகியோரின் கோரிக்கையின் பிரகாரமே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முக்கியமாக 5 விடயங்கள் தொடர்பில் பேச்சு நடத்தினோம். முதல் சுற்றுபேச்சிலேயே திருப்தியடைந்துவிட முடியாது. அதற்கு மேலும் பேச்சுகள் நடத்தப் பட வேண்டும் – எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் வேட்பாளர் விவகாரம் பற்றி பேசப்பட்டதா என்ற கேள்விக்கு, தான் எதையுமே கேட்டு வாங்கப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பதில் வழங்கியுள்ளார். அத்துடன், உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் நீடிக்கப்படவேண்டும் எனவும், இது பற்றி கொழும்பில் பேச்சு நடைபெறவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts