வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரால் சபையில் கூறப்பட்ட ‘பியர் குடிக்கும் காசு’ என்னும் விடயம் கன்சாட்டில் பதிவு செய்யப்படாமல் நீக்கப்பட்டது.
வடமாகாண சபை நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற போது, முதலமைச்சர் நிதியத்துக்கு வழங்கப்படும் காசை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் உறுப்பினர்கள் இடையில் விவாதம் நடைபெற்றது.
“முதலமைச்சர் நிதியத்துக்கு வழங்கப்படும் காசை என்ன தேவைக்கு தான் பயன்படுத்த வேண்டும் எனக்கூறி பெறப்படுகின்றதோ அந்தத் தேவைக்குத்தான் பயன்படுத்த வேண்டும். வேறு தேவைக்கு பயன்படுத்துவதாக இருந்தால் காசு வழங்குநரின் ஒப்புதலுடன் தான் செய்ய வேண்டும்” என சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கூறியிருந்தார்.
இதன்போது, கருத்துக்கூறிய சபையின் எதிர்க்கட்சித்தலைவர்,
“புலம்பெயர்ந்து வசிப்பவர்களில் சிலர் அன்றைய தினம் பியர் குடிக்கின்ற காசை தான் அனுப்புவார்கள். அவர்கள் நோக்கம் பார்த்து அனுப்பமாட்டார்கள். இதனால், அவர்களிடம் கேட்டுத்தான் செலவு செய்ய வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை” என்றார்.
சபையின் எதிர்க்கட்சித்தலைவர் இவ்வாறு கூறியதை எதிர்த்த வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், “பியர் குடிக்கின்ற காசு என்பதை கன்சாட்டில் இருந்து நீக்கப்படவேண்டும்” என்றார்.
அதனை ஏற்றுக்கொண்ட அவைத்தலைவர் அந்த வார்த்தையை நீக்குவதாக அறிவித்தார்.